Advertisment

“தமிழகத்தின் தனிப்பெரும் சமூக, அரசியல் அடையாளமாக உயர்ந்து நிற்பவர்” - த.வெ.க தலைவர் விஜய்!

TVK leader Vijay says Standing tall as a social and political symbol of TN 

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணுவின் 100வது பிறந்தநாள் விழா இன்று (26.12.2024) சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க தலைவர் வைகோ மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியலைத் தங்கள் அடையாளமாக ஆக்கிக் கொண்டவர்கள் மத்தியில், அரசியலுக்கே ஒரு தனித்த பெரும் அடையாளமாகத் திகழ்பவர், மரியாதைக்குரிய நல்லக்கண்ணு அய்யா.

சுதந்திரப் போராட்டக் களத்தில் நின்றவர். பிறகு பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். சிறைக் கொட்டடிகளைச் சிரித்துக்கொண்டே சிநேகித்தவர். தடைகளைத் தகர்த்த தனிப்பெரும் தளகர்த்தர். சாதிய வன்மத்திற்கு எதிராகக் களமாடியவர் மட்டுமன்று. வாழ்ந்து காட்டியவர். சமூக நீதியை, சமத்துவத்தை நிலைநாட்டியவர். தன் வாழ்நாள் முழுமைக்கும் அதை வாழ்ந்து காட்டியே நிரூபித்துக் கொண்டிருப்பவர். தமிழகத்தின் தனிப்பெரும் சமூக, அரசியல் அடையாளமாக உயர்ந்து நிற்பவர்.

தங்களுக்கான நிதியை மட்டுமே திரட்டும் அரசியலாளர்கள் இடையே, தனக்குக் கிடைத்த நிதி அனைத்தையும் தான் சார்ந்த இயக்கத்திற்கும் விவசாயிகளுக்கும் அரசுக்கும் கொடுத்த உத்தமர். தலைவனாக வருவது முக்கியமன்று. தலைவனாக வாழ்ந்து காட்டுவதே முக்கியம் என்ற இலக்கணத்திற்கு இன்றுவரை ஒற்றை உதாரணம், நேர்மையின் ஊற்றுக்கண்ணான நல்லக்கண்ணு அய்யா மட்டுமே. அவரே, நம் தலைமுறைக்கான நேர்மையான அரசியல் பாதையாகவும் பாடமாகவும் திகழ்பவர். நூற்றாண்டு காணும் அவரைப் போற்றிப் புகழ்ந்து வணங்குவோம். அய்யாவின் உடல்நலம், மனநலம், சிந்தனை வளம் நீடித்து நிலைக்க இறைவனை வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

cpi
இதையும் படியுங்கள்
Subscribe