Skip to main content

“எல்லாவற்றுக்கும் காரணம் அமலாக்கத்துறை படுத்தும் பாடுதான்” - த.வெ.க. தலைவர் விஜய் விமர்சனம்!

Published on 25/05/2025 | Edited on 25/05/2025

 

Tvk Leader Vijay says reason for everything is the trouble caused by the ED

குடும்பச் சுயநலத்திற்காக, தமிழக மானத்தை அடகுவைத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் தாள் பணிந்து தலைவணங்கி அடைக்கலம் புகுந்த தி.மு.க. தலைமை என  என த.வெ.க. தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், மாநிலத்தை ஆளுகின்ற ஊழல் கபடதாரி தி.மு.க. அரசியல் எதிரி என்றும், ஒன்றியத்தை ஆளுகின்ற பிளவுவாத பா.ஜ.க. கொள்கை எதிரி என்றும் தீர்க்கமாக அறிவித்திருந்தோம். ஆட்சியில் இருக்கும் இவ்விரு கட்சிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து சுட்டிக் காட்டியும் வருகிறோம். அ.தி.மு.க. பா.ஜ.க. இடையே பழைய கூட்டணி மீண்டும் புதுப்பிக்கப்பட்ட போதே, தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் உள்ள மறைமுகக் கூட்டணி பற்றியும் நாம் தெரிவித்திருந்தோம். அதே போல், ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும்போது, உடனடியாக அவர் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டால், அவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போல அனைத்தும் மறைக்கப்படும் என்பதையும் தெரிவித்திருந்தோம்.

அதையும் நிரூபிப்பது போலவே அமைச்சர்கள் பலரைத் தொடர்ந்து தற்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் டெல்லிப் பயணம் அமைந்துள்ளது. டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை நடத்திய ரெய்டைத் தொடர்ந்து, சமீபத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் தி.மு.க. தலைமையின் குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதற்கிடையே, டாஸ்மாக் மீதான அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையையும் வாங்கியது. எனினும், இது நிரந்தரத் தடையல்ல என்பதால், எங்கே பேசினால் விசாரணை தடுத்து நிறுத்தப்படுமோ, அங்கே பேசியாக வேண்டிய சூழ்நிலைக்கு, தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டார். அதற்கேற்றாற்போல அமைந்ததுதான் நிதி ஆயோக் கூட்டம்.

சென்ற ஆண்டு இதே நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடந்தபோது அக்கூட்டத்துக்குச் செல்லாமல், தான் செல்லாததற்கான காரணங்களை அடுக்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஒரு வீடியோ வெளியிட்டார். அப்போது சொன்ன காரணங்கள், இப்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்க, இம்முறை மட்டும் ஏன் செல்ல வேண்டும்? எல்லாவற்றுக்கும் காரணம், அமலாக்கத் துறை படுத்தும் பாடுதான். என்றைக்கு இருந்தாலும் அமலாக்கத் துறை நடவடிக்கை, காலைச் சுற்றும் பாம்பு என்பதை உணர்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரூ.1000 கோடி ஊழல் தோண்டி எடுக்கப்பட்டால் தம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் இந்த முறை, நிதி ஆயோக் கூட்டத்தைக் காரணமாக வைத்து டெல்லி சென்றார். பிரதமரையும் வேறு தனியாகச் சந்தித்தார். உண்மையிலேயே அந்தச் சந்திப்பில், அமலாக்கத் துறை சோதனைகள், வழக்குகள் தொடர்பாகவும் தன் குடும்பத்திற்காகவும் ஒன்றிய அரசின் பிரதமரிடம் எதுவும் பேசவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மனசாட்சியுடன் வெளிப்படையாகக் கூற முடியுமா?.

அது மட்டுமின்றி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தங்களிடம் தஞ்சம் அடையத்தான் வருகிறார் என்பது தெரிந்தும், தி.மு.க.வை அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக எதிர்ப்பது உண்மையெனில், பா.ஜ.க.வால் எப்படி இவர்களைக் கொஞ்சிக் குலாவி வரவேற்க இயலும்? நாம் ஏற்கெனவே சொன்னது போல, இதுதான் இவர்கள் இருவருக்குள்ளும் உள்ள மறைமுகக் கூட்டின் வெளிப்பாடு. இச்சூழலில், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதை உற்று நோக்கினாலே பூனைக்குட்டி வெளியே வந்தது புலப்படும். அந்தப் புகைப்படத்தில், பா.ஜ.க.வுடன் வெளிப்படையான கூட்டணியில் இருக்கும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒருபுறம் முன்வரிசையில் நிற்கிறார். அதே முன்வரிசையில் இன்னொரு புறம், தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிற்கிறார். இதற்கு என்ன பொருள்? ஒருவருக்கு வெளிப்படைக் கூட்டணி என்பதால் முன்வரிசை. இன்னொருவருக்கு மறைமுகக் கூட்டணி என்பதால் முன்வரிசை. இதுதானே உண்மை?.

Tvk Leader Vijay says reason for everything is the trouble caused by the ED

இது சாதாரண நிகழ்வு போலத் தோற்றம் கொண்டதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனாலும், தி.மு.க. - பா.ஜ.க. இடையிலான மறைமுகக் கூட்டும் பேர அரசியலும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதையே இது காட்டுகிறது. இதுவே இதன் பின் இருக்கும் மிகப் பெரிய உண்மை. ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சிக்கும் போக்கைக் கண்டித்து, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்த நிதி ஆயோக் கூட்டத்தை நிராகரித்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் விடுவதும், ஆளும்கட்சியாக இருக்கும்போது கைகுலுக்கி காலில் விழுவதும்தான் தி.மு.க. தலைமையின் அரசியல். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் திடீரென இந்த வருடம் மட்டும் செல்ல வேண்டிய அவசியம் என்ன?. இது மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல. தன்னுடைய குடும்ப வாரிசு நிதியைக் காப்பாற்ற மட்டுமே என்பது சாமானிய மக்கள் நன்கு அறிந்ததே.

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மன்றத்தில் தோல்வி உறுதி என்பது தி.மு.க.வுக்குத் தெரிந்துவிட்டது. அதனால் நேர்முகக் கூட்டு, மறைமுகக் கூட்டணி என்று, ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பாஜகவிற்குச் சாமரம் வீசியாவது இனி காலத்தை ஓட்டித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறது. இப்படி இறுமாப்புக் கணக்குகளைப் போடுபவர்களுக்கு எம் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடத்தைப் புகட்டத் தயாராகிவிட்டார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். குறிப்பாக, வருங்காலத்தில் பிளவுவாத பா.ஜ.க.வுடன் நேரடிக் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவில் தமிழ்நாட்டைச் சுரண்டிக் கொள்ளை அடித்து. அவர்களிடம் நெடுஞ்சாண்கிடையாகத் தி.மு.க. சரணாகதி அடைந்துள்ளது. இந்த அவலமான தி.மு.க அரசின் ஊழல் பெருச்சாளிகள் அனைவரும் தமிழ்நாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்டு, அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தப்பட்டு. தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு தமிழக வெற்றிக் கழகம் உண்மையான மக்களாட்சியை அமைக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்