Advertisment

TvK Leader Vijay to hold important meeting tomorrow

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச் சட்டமன்ற தேர்தலுக்கு த.வெ.க.வும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அந்த வகையில் கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் கடந்த மாதம் (26 மற்றும் 27.04.2025) நடைபெற்றது. இந்த கூட்டமானது கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் 7 ஆகிய மாவட்டங்களைச் சேர்த்த அக்கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் விஜய் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கட்சி சார்ந்து மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்றியிருந்தார். இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களில் முதற்கட்டமாக 80 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களைக் கடந்த 30ஆம் தேதி (30.05.2025) விஜய் சந்தித்துப் பாராட்டி வாத்துகளைத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் 2ஆம் கட்டமாக நாளை (04.06.2025) கல்வி விருதும் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் உள்ள 75 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்குக் கல்வி விருதினை விஜய் வழங்க உள்ளார். இந்த விழாவிற்குப் பின்னர் விஜய் வாக்குச்சாவடிக்குழு பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பூத் கமிட்டி கருத்தரங்கத்தை மீண்டும் மாவட்ட ரீதியாக விஜய் தலைமையில் நடைபெற உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்யவும் அக்கட்சித் தலைமைக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் விஜய் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி விரைவாக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்து ஒவ்வொரு மாவட்ட ரீதியாக பூத் கமிட்டி பட்டியலைத் தயாரித்து இறுதி செய்ய விஜய் அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் வரும் ஜூலை மாதத்தில் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார். இதற்கான பயணத் திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன. அதோடு ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகளைக் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.