Skip to main content

ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் முழுமையான பொதுமுடக்கம் -முதல்வர் அறிவிப்பு!

 

புதுச்சேரியில் மத்திய அரசு 3-ஆம் கட்ட தளர்வுகள் அறிவித்ததன்படி ஆகஸ்ட் 31 வரை காலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்த நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார். 

 

இந்த நிலையில் நேற்று (12.08.2020) பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தலைமைச் செயலகக் கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், வைத்தியலிங்கம் எம்.பி, தி.மு.க சட்டப்பேரவை குழுத் தலைவர் சிவா எம்.எல்.ஏ, அ.தி.மு.க சட்டப்பேரவை குழுத் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ, பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ பி.சுவாமிநாதன் மற்றும் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசுத்துறைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில், பெருகிவரும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

தொடர்ந்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில், "நாட்டிலேயே அதிகபட்சமாக புதுச்சேரியில்தான் மொத்த மக்கள் தொகையில் 12 சதவீதம் பேருக்கு கரோனா உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது தினமும் 1,000 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்படும் நிலையில் இதனை 2,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

 

தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்க வேண்டும், அதிகளவு பரிசோதனைகள் செய்ய வேண்டும், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் என்பன குறித்துப் பேசப்பட்டது. மேலும் பரிசோதனை முடிவுகள் விரைவாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 


அனைத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் குறைந்தபட்சம் 200 பேருக்கு எனப் பரிசோதனை செய்தால் வரும் நாட்களில் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். 50 ஆயிரம் ஆர்.டீ-பி.சி.ஆர். கிட்டுகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 75 க்கும் மேற்பட்ட உடை கவசங்கள் உள்ளது. 


தற்போது புதுச்சேரியில் கரோனா பரவல் 7 சதவீதமாக உள்ளது. இன்னும் 6 வாரகாலத்திற்கு கரோனா வேகமாகப் பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.   

 

புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே கடைகள் திறப்பு காலை 5 மணி முதல் 9 மணிவரை,  என்றிருந்தது. நாளை மறுதினம் முதல் காலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும்.  இரவு 8 மணியில் இருந்து காலை 6 மணிவரை முழு ஊரடங்கு அமுலில் இருக்கும். 

 

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதேபோல் புதுவையிலும் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தினால் சுபநிகழ்ச்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே வரும் வாரம் முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வரும். அன்று எந்தவிதத் தளர்வுகளும் இல்லை. காலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணிவரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும். திருமண மண்டபங்களில் 50 பேருக்கு மேற்பட்டோர் கூடினால் சீல் வைக்கப்படும். 

 

AD

 

கரோனா நோய்ப் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக மாநிலத்தின் வருவாய் 700 கோடி குறைந்துள்ளது. மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை ரூபாய் 560 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. இருப்பினும் கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான பொருட்களை வழங்கவும்,  ஆம்புலன்ஸ், மருத்துவக் கருவிகள் வாங்கவும் புதுச்சேரி மாநில அரசு ரூபாய் 25 கோடி ஒதுக்கியுள்ளது.

 

புதுவைக்கு கரோனா நிவாரணத்துக்காக ரூபாய் 925 கோடி வேண்டும் எனக் கேட்டும் இதுவரை 3 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ஆனால் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திராவுக்கு நிவாரண நிதி தாராளமாக வழங்கப்பட்டுள்ளது. அதை ஈடுசெய்ய வேண்டிய சூழலில் உள்ளோம். மத்திய அரசானது நமக்குக் கொடுக்க வேண்டிய நிதியைத் தரவில்லை. நிதிநிலை சீரடைந்த பிறகு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்" எனக் கூறியுள்ளார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்