/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dhina-ni.jpg)
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார்.
இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையான நிலையில், பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் உதயநிதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர். அதிலும் அயோத்தி சாமியார் ஒருவர் உதயநிதியின் தலையைக் கொண்டு வந்தால் ரூ. 10 கோடி சன்மானம் தருவதாகத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சாமியாருக்கு எதிராகத் தமிழகத்தில் உருவ பொம்மை எரிக்கப்பட்டு, புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து விளையாட்டாக பேசியுள்ளார்’என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியது தவறு. அதற்காக அவர் தலைக்கு விலை பேசுவது அதைவிட காட்டுமிராண்டித்தனம். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து விளையாட்டாக பேசியுள்ளார். அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சனாதனம் என்பது அனைத்து மதங்களிலும் உள்ளது. அந்த அந்த காலத்திற்கு ஏற்ப அதில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது. அது எல்லா காலத்திற்கும் பொருந்தாது.
உதயநிதியின் தாத்தா கலைஞர், தந்தையும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் ஆகியோர் இந்து மதம் குறித்தும் கடவுள்மற்றும் சமஸ்கிருதம் குறித்தும் இழிவாக பேசுவார்கள். ஆனால், அவர்களது குடும்பத்தினர் கோவிலை சுற்றி வலம் வருவார்கள். எனவே, அவர்கள் இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறார்கள். சனாதனத்தைப் பற்றி பேசியதை உதயநிதி ஸ்டாலின் திரும்பப் பெற வேண்டும். எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. எடப்பாடி பழனிசாமி உள்ள கூட்டணியில் இடம் பெற வேண்டுமா என்று என்னிடம் எங்களது நிர்வாகிகள், தொண்டர்கள் கேட்கின்றனர். அதனால், தனித்து நிற்பது சாலச் சிறந்தது என்ற முடிவை எடுக்கலாம். எனவே, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து நிற்கத்தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)