Skip to main content

குருமூர்த்தி கருத்துக்கு டி.டி.வி தினகரன் பதிலடி...

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

ttv reply to gurumoorthy speech in thuglak function

 

துக்ளக் 51 ஆவது ஆண்டு விழாவில் அந்த பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி பேசுகையில்,  சசிகலா குறித்து அவர் பேசிய வார்த்தைகள் அமமுக வட்டாரங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த பேச்சிற்கு அக்கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குருமூர்த்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டிடிவி தினகரன், "துக்ளக் ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.

 

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் விமர்சகராக, துக்ளக் இதழின் நிறுவன ஆசிரியராக இருந்த சோ, தனது இறுதி மூச்சு வரை கடுமையான விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வோடும் நாகரிக எல்லையைத் தாண்டாமலும் செய்த பெருமைக்குரியவர்.

 

அவரைத் தனது ஆசானாகச் சொல்லிக்கொண்டு, துக்ளக் ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோவின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாகவும் இருந்து வருகிறது.

 

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல.

 

துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு சீட்டை டி.டி.வி.தினகரன் காலில் விழுந்து பெற்றிருக்கிறார்” - தங்க தமிழ்ச்செல்வன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thanga tamilselvan was severely criticized by T.D.V.Thinakaran

திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக தேனி நேரு சிலை மும்முனை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக திறந்த ஜீப்பில் வந்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி  மூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஷஜீவனாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் அமைச்சர்கள் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, “முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை பலப்படுத்தி ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும். திண்டுக்கல் - சபரிமலை ரயில் திட்டம் கொண்டு வரப்படும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேனி, உசிலம்பட்டி, போடி ஆகிய  பகுதியில் புறவழிச்சாலைகள் புதிதாக அமைக்கப்படும்.

டிடிவி தினகரன் வனவாசம் சென்று வந்தது போல உள்ளது. மீண்டும் தேனி வந்தது என்று கூறுகிறாரே என்ற கேள்விக்கு ? அவர் அப்படியே சென்று இருக்கலாம் .தேர்தல் என்பது மக்களோடு மக்களாக களத்தில் இருந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்திருக்க வேண்டும். 14 வருடம் வன வாசம் சென்று மீண்டும் வந்திருப்பதாக கூறும் டிடிவி தினகரன், அப்படியே சென்றிருக்க வேண்டியது தானே, ஏன் மீண்டும் வந்தார்? பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன், ஒரு சீட்டை காலில் விழுந்து பெற்று இருக்கிறார்.

செல்வாக்கை நிரூபிக்க ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தனித்து சுயேட்சையாக போட்டியிட வேண்டும். இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார் என்று டிடிவி.தினகரன் கேட்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியா கூட்டணி வெற்றி பெறும் அதன் பின்னர் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இதைப்பற்றி தினகரன் கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார்.

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.