TTV Dinakaran will contest in kovilpatty

Advertisment

சட்டமன்றம், நாடாளுமன்றம் என எந்த வடிவில் தேர்தல் வந்தாலும், தங்களுடைய தலைவர் இந்தத் தொகுதியில்தான் போட்டியிட வேண்டுமென்பது பலரின் விருப்பம். இந்த விருப்பங்கள் தங்களுடையத் தலைவரின் மீதான அபிமானத்தைக் காட்டுவதாக இருந்தாலும் ஒரு சிலரின் விருப்பமும் நிறைவேறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், “டி.டி.வி. தினகரன், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது” என்கிறார் அ.ம.மு.க. தேர்தல் பிரிவுச் செயலாளர் மாணிக்கராஜா.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பகுதியான கடலையூர் சாலையில், ஒ.செ. விஜயபாஸ்கரன் ஏற்பாட்டில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள் தலைமையில் அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி. தினகரனின் 57 வது ஆண்டு பிறந்த நாள் விழா நடைப்பெற்றது. இதில், பிரஷர் குக்கர் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

TTV Dinakaran will contest in kovilpatty

Advertisment

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 500 நபர்களுக்கு பிரஷர் குக்கர் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அ.ம.மு.க. தேர்தல் பிரிவுச் செயலாளரும், கட்சியின் தென்மண்டல பொறுப்பாளருமான மாணிக்கராஜா, “வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் டி.டி.வி. தினகரன், யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அ.ம.மு.க. நிச்சயமாக வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.

கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க நாகர்கோவில் செல்லும் வழியில் கோவில்பட்டியில் அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பையும் மக்கள் எழுச்சியையும் கட்டுக்கடங்காத கூட்டத்தையும் பார்த்துவிட்டு டி.டி.வி. தினகரன் என்னிடம், “எந்தத் தொகுதியில் நிற்கலாம் என சிந்தித்துக் கொண்டிருந்தேன். கோவில்பட்டியிலேயே போட்டியிடலாம் என இப்போது நினைக்கிறேன்” என்று கூறினார்.

ஒரு முதலமைச்சர் வேட்பாளர் கோவில்பட்டியில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது கோவில்பட்டி சிங்கப்பூர் போன்று மாறும். கட்டாயம் நீங்கள் கோவில்பட்டியில் போட்டியிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரனிடம் நான் வலியுறுத்தினேன். ஆக டி.டி.வி. தினகரன் இங்கு நிற்பது உறுதி” என்றார்.

Advertisment

ஆண்டிபட்டி, மன்னார்குடி ஆகிய தொகுதிகளில் டி.டி.வி. போட்டியிடக் கூடும் என கணிக்கப்பட்ட சூழலில், டி.டி.வி. மனதில் கோவில்பட்டி தொகுதி இடம் பெற்றிருப்பதாக அ.ம.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்க, வி.ஐ.பி. அந்தஸ்தினை எட்டியுள்ளது கோவில்பட்டி.

படங்கள்: விவேக்