ADVERTISEMENT

‘ஸ்கெட்ச்’ தினகரன்! ‘டிக்கிலோனா’ அமைச்சர்! ‘சென்டிமென்ட்’ திமுக! -விறுவிறு விருதுநகர்!

07:26 PM Mar 08, 2019 | cnramki

ADVERTISEMENT

நாடாளுமன்ற தேர்தலோடு 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வந்துவிடக்கூடிய சூழ்நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியும் பரபரத்துக் கிடக்கிறது. ஏதேதோ பண்ணுகின்றனர். விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் தட்பவெப்பம் இது –

ADVERTISEMENT

அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்பதே நோக்கம்!
-அமமுக அதிரடி!

“பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றிபெறுவோம். வருங்காலப் பிரதமரையே நிர்ணயிக்கும் கட்சிதான் அமமுக.” என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசினார் டிடிவி தினகரன். மதுரையிலோ “இடைதேர்தலில் 19 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்” என்று கட்சி நிர்வாகிகளிடம் உறுதியாகச் சொல்லியிருக்கிறார். ‘இதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்று அக்கட்சியினரே தினகரனை ஒருமாதிரியாகத்தான் பார்க்கின்றனர். ஆனாலும், அவர் நினைத்ததைச் சாதித்துக்காட்டுவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.
தினகரன் மனதில் என்னதான் இருக்கிறதாம்?


“தென்மாவட்டங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் கணிசமாக உள்ள முக்குலத்தோர் வாக்குகளில் 50000-லிருந்து 70000 வரை தனக்குச் சாதகமானவை என்றெண்ணும் தினகரன், பெருவாரியான வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் அதிமுகவுக்குத் தோல்வியைத் தரமுடியும் என்று உள்ளுக்குள் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறார். அதிமுக வாக்குகள் மட்டுமல்ல, திமுக வாக்குகளும் சாதி அடிப்படையில் தினகரன் ஆதரவு நிலை எடுக்கப்போவதை தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது தெரிந்துகொள்ளலாம். வட மாவட்டங்களில் மட்டுமல்ல, தென் மாவட்டங்களிலும் ஒரு தொகுதியில்கூட அமமுக வெற்றி பெறாது என்பது அறிவுஜீவியான அவருக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும், அரசியல் தொலைநோக்குடன், வெற்றி உறுதி என்று பேசி, தேர்தல் களத்தைக் கலக்கி வருகிறார். வரும் தேர்தலில், தனிப்பெரும் சக்தியாகத் தன்னை வெளிப்படுத்தி அதிமுக ஆட்சியைக் கவிழச் செய்வதே அவருடைய இலக்காக இருக்கிறது. அதற்காகவே, ‘ஸ்கெட்ச்’ போட்டு செயல்படுகிறார்.” என்றார் அமமுகவில் தினகரனின் எண்ண ஓட்டத்தை அறிந்த நிர்வாகி ஒருவர்.

தினகரனுக்கு எதிரான திடீர் பாய்ச்சல்!
-டிரென்டிங் அமைச்சரின் டிக்கிலோனா வாய்ஸ்!


தினகரன் விஷயத்தில் பதுங்கியே இருந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வழக்கத்துக்கு மாறாக இப்போது வேகம் காட்டுகிறார். மேடைகளில் தினகரனை விமர்சித்து அவரைப் பிரபலப்படுத்த வேண்டாம் என்ற எடப்பாடியின் எண்ணத்தைப் பிரதிபலித்துவந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, தினகரனின் சமீபத்திய பேச்சு எடப்பாடி மீதான நேரடி தாக்குதலாக இருப்பதால், அதற்குப் பதிலடி தரும் விதத்தில் பேச ஆரம்பித்திருக்கிறார்.

தினகரனால், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக இழக்கும் முக்குலத்தோர் வாக்குகள் குறித்தெல்லாம் மா.செ. ராஜேந்திரபாலாஜி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. நாடார் வாக்குகள், தேவேந்திரகுல வாக்குகள் மற்றும் இதர சமுதாய வாக்குகளைக் கவர்ந்துவிட முடியும் என்ற கணக்கோடு இருக்கிறார் அமைச்சர். ரூ.1000 பொங்கல் நிதி, ரூ.2000 சிறப்பு நிதி பெற்ற மக்கள், தேர்தலில் எடப்பாடி பக்கம் நிற்பார்கள் என்று கட்சி நிர்வாகிகளிடம் நம்பிக்கை வார்த்தைகளை வெளிப்படுத்தி வருகிறார். ஆனாலும், மேடைகளில் அளவுக்கதிகமாக மோடிக்குத் துதிபாடுவது, அதிரடியாக ’டிக்கிலோனா’ டைப்பில் எதையாவது பேசி ட்ரென்டிங் ஆக்குவது என, தனி ஆவர்த்தனமாகச் செயல்பட்டுவரும் ராஜேந்திரபாலாஜி, நிர்வாகிகளை வைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவதில்லை என்று அக்கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர். அதற்கு அமைச்சர் வட்டத்திலோ “ஆலோசனைக் கூட்டம் நடத்துவதைக் காட்டிலும் மக்களைச் சந்திப்பதையே முக்கியமாக நினைக்கிறார் அமைச்சர். வெற்று அறிக்கைவிடும் அரசியல்வாதியாகவா இருக்கிறார்? தொகுதி முழுவதும் சுற்றிவந்து மக்களைச் சந்திக்கிறார்.

பொதுக் கூட்டம் நடைபெறும் இடங்களிலெல்லாம் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். இத்தனை வேகமாகச் செயல்படுபவரைக் குறைகூறுவது அர்த்தமற்றது.” என்கிறார்கள். ஆனாலும், அதிமுக நிர்வாகிகள் “வாக்குகளை வாக்குச்சாவடிக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பது எத்தனை முக்கியமானது, பூத் கமிட்டி கூட்டம் அல்லவா அதற்கான வழிவகுக்கும். அதைக்கூட செய்யவில்லையென்றால் எப்படி?” என்று கேட்கிறார்கள்.

தேர்தல் வெற்றிக்காக திமுக நடத்திய ‘சென்டிமென்ட்’ மாநாடு!

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்படும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், மா.செ.க்களில் ஒருவரான கே.கே.எஸ்.எஸ்.ஆர், ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ.வான தங்கப்பாண்டியன் மீது செம கடுப்பில் இருப்பதாகப் புகார் வாசிக்கிறார்கள். கிராமசபை கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்தபோது, தங்கப்பாண்டியன் மீது வெளிப்படையாகவே எரிச்சலை உமிழ்ந்தாராம் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.. மா.செ.க்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசுவைக் காட்டிலும், எம்.எல்.ஏ. என்ற முறையில் தங்கப்பாண்டியன் ஆக்டிவாகச் செயல்படுவதுதான் உறுத்தலுக்குக் காரணமாம்.

விளம்பர வெளிச்சம் தேடுகிறார் என்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வை வெளிப்படையாகவே விமர்சிக்கிறாராம் கே.கே.எஸ்.எஸ்.ஆர். என்று கொளுத்திப் போடுகிறார்கள். நாம் ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனிடமே கேட்டோம். அவரோ “அரசியலில் நான் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் பாடம் பயின்று வளர்ந்து வருபவன். தவறான தகவலை யாரோ பரப்பியிருக்கிறார்கள். இரண்டு மா.செ.க்களும் என்னை நல்லபடியாக நடத்துகிறார்கள். ஒரு பிரச்சனையும் இல்லை.” என்று வேகமாக மறுத்தார்.

2004 பாராளுமன்ற தேர்தலின்போது விருதுநகரில் தென்மண்டல மாநாட்டை நடத்தியதாம் திமுக. அப்போது 40-க்கு 40 வெற்றி சாத்தியமாயிற்றாம். அதனால், அதே விருதுநகரில் ‘சென்டிமென்ட்’ ஆக கடந்த 6-ஆம் தேதி மாநாடு நடத்தியது திமுக. அதுவும் அமாவாசை நாளில். இறக்கும் வரையிலும் விடாப்பிடியாக பகுத்தறிவு பேசிவந்த கலைஞர், தன் உயிரைக்காட்டிலும் மேலாக மதித்த திமுகழகம், தற்போது ‘சென்டிமென்ட்’ பாதைக்கு மாறியிருப்பது விந்தைதான்!


தொண்டர்கள், சிங்கிள் டீ குடித்துவிட்டு தெருக்களில் கட்சிக் கொடிகளைத் தோரணம் கட்டியது, ஊர் ஊராகச் சென்று கட்சி போஸ்டர் ஒட்டியதெல்லாம் தி.மு.கழகத்தின் கடந்த காலமாகிவிட்டது. தங்களை அம்போவென விட்டுவிட்டு, தலைவர்கள் மட்டுமே முன்னேற்றம் கண்டதால், தொண்டர்களும் காலப்போக்கில் மாறிவிட்டனர். அதன் விளைவுதான் – விருதுநகரில் நடந்த தென் மண்டல திமுக மாநாட்டுக்கு தலைக்கு ரூ.200 கொடுத்து, ஆட்களைக் கூட்டிவர வேண்டிய நிலைக்கு அக்கட்சி ஆளானது.

“கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கீடாகி, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும், பிரம்மாண்ட கூட்டம் நடத்தி வேட்பாளர்களை மேடை ஏற்றியிருக்கலாம். இத்தனை செலவழித்து ‘சென்டிமென்ட்’ மாநாடு நடத்தியிருக்க வேண்டியதில்லை.” என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT