TTV Dhinakaran questions What is CM MK Stalin going to answer

தமிழக அரசுப் பணிகளில் இருந்து இன்று (31.05.2025) ஒரே நாளில் 8 ஆயிரத்து 144 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தற்காலிக ஊழியர்களையும், ஆலோசகர்களையும் வைத்தே அரசு நிர்வாகத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறதா திமுக அரசு? என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக அரசின் குரூப் ஏ, குரூப் பி, குரூப் டி உள்ளிட்ட பணியிடங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 144 அரசுப் பணியாளர்கள் இன்று ஒரே நாளில் ஓய்வுபெறுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், ஆண்டுதோறும் பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும், அந்த வாக்குறுதியில் 25 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை என்பதற்கு அரசுத்துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையே சாட்சியாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவார்கள் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதற்கு ஏற்ப அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போதுமான எண்ணிக்கையில் அரசு ஊழியர்களை நியமிக்கத் தவறிய அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்?.

Advertisment

அரசுப்பணி கனவில் லட்சக்கணகான இளைஞர்கள் இரவு, பகலாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், ஓய்வுபெற்ற ஊழியர்களையும், ஆலோசகர்களையும் மறைமுகமாக நியமித்து இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை சீரழிப்பது தான் திராவிட மாடல் அரசின் சமூக நீதியா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து அரசுப்பள்ளிகள் நாளை மறுநாள் (02.06.2025) திறக்கப்பட உள்ள நிலையில், இன்று ஒரே நாளில் ஏராளமான ஆசிரியர்கள் ஓய்வுபெறுவது பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அரசுப்பணியாளர்களின் காலிப்பணியிடங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு நலத்திட்டங்களும் உரிய நேரத்தில் சென்றடைவதும் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசுத்துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, திமுக ஆட்சிக்கு வந்த பின் அரசுத்துறைகளில் இதுவரை நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களின் விவரங்களை வெளிப்படைத்தன்மையோடு வெளியிட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.