
வேட்பு மனுவில் தவறான தகவல் அளித்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்ததாகத் தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. சேலம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் புகாருக்கான முகாந்திரம் இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான ஆவணங்களையும் காவல்துறையினர் தாக்கல் செய்வார்கள் என்றும் புகார்தாரரான மிலானியும் ஆஜர் ஆவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.