Skip to main content

நாளை அதிமுக மா.செ. கூட்டம்! கூட்டணி முறிவு? 

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

Tomorrow ADMK district secretaries  Alliance breakdown?

 

இந்திய ஜனநாயகக் கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் அதிமுகவும், பாஜகவும் தமிழகத்தில் மோதிக் கொள்கின்றன. சமீப காலமாக அதிமுக - தமிழக பாஜக இடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது. சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதையடுத்து அண்ணா குறித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி. சண்முகம் போன்றவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இது தொடர்பாக மாறி மாறி இரு கட்சித் தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றே அறிவித்தார். 

 

இதனையடுத்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களுமான வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர். இவர்கள் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து டெல்லிக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் 5 பேரும் நேற்று இரவு பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்த சூழலில் அதிமுக மூத்த நிர்வாகிகள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினர். இதற்கு காரணம், அமித்ஷா அதிமுக நிர்வாகிகளைச் சந்திக்க நேரம் ஒதுக்காததால் பியூஷ் கோயல் அவர்களைச் சந்தித்தார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் நேற்று டெல்லியிலிருந்து திரும்பி சென்னை வந்தனர். 

 

அதிமுக நிர்வாகிகள் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவைச் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பில், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக தரப்பிலிருந்து வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணியை தொடர்வது குறித்து முடிவு எடுக்கமுடியும் என பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அண்ணாமலையை மாற்றச் சொல்லும் முடிவில் இ.பி.எஸ். உறுதியாக உள்ளதாகவும் அதிமுக நிர்வாகிகள் ஜெ.பி.நட்டாவிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதேசமயம், அதிமுக வைத்த கருத்தை ஜெ.பி.நட்டா ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் சொல்லப்படுகிறது. 

 

இந்நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். தலைமையில் நடைபெறும் என அதிமுக தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிடோர் கலந்துகொள்வார்கள் என சொல்லப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்