Skip to main content

என் வாழ்க்கையில் இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்... வைகோ பேட்டி

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

தி.மு.க ஆட்சி காலத்தில் 2009ஆம் ஆண்டு சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
 

தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தண்டனையை இன்றே வழங்குமாறு நீதிமன்றத்தில் வைகோ கோரிக்கை வைத்தார். வைகோவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், ஒரு ஆண்டு  சிறை தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.


 

 

தீர்ப்பில் உள்ள வாசகத்தில் பிழை உள்ளது, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நான் ஒரு போதும் கோரவில்லை. தனக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என நீதிபதியிடம் வைகோ கூறினார். வைகோவின் வாதத்தை தொடர்ந்து தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. 
 

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தபின் செய்தியாளர்களை சந்தித்த வைகோ:-
 

என் வாழ்க்கையில் இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். விடுதலைப்புலிகளை நான் தொடர்ந்து ஆதரித்ததற்காகவும், இந்திய அரசு ஆயுத உதவியும், பண உதவியும் செய்ததால் உலக நாடுகளில் ஆயுதம் வாங்கி இலங்கையில் ராஜபச்சே அரசு லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது என்பதை பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் நேரடியாக சென்று மெமோரண்டமாக கொடுத்தோம். 17 முறை சந்தித்திருக்கின்றேன். இந்த கடிதங்களை தொகுத்து, அண்ணாமலை மன்றத்தில் நூல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு என் மீது தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. 

 

vaiko


நீதிமன்றம் விசாரித்தது. இளைஞர்களை திரட்டிக்கொண்டு இலங்கையில் தமிழ் மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டால் நாதி இல்லை என்று போய்விடாது. இங்கிருந்து ஆயுதம் ஏந்தி செல்ல தயாராகவும் இருப்பார்கள். நான் அதற்கு தலைமை ஏற்று செல்வேன் என்று பேசினீர்களா என்று கேள்வி எழுப்பியது. ஆமாம் பேசினேன் என்றேன். இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு இந்திய அரசு காரணம் என்று பேசினேன் என்றேன். அந்த வழக்கில் நான் விடுதலை செய்யப்பட்டேன். 
 

அதற்கு பிறகு ராணி சீதை மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதே புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து குற்றம் சாட்டுகிறேன் என்ற தலைப்பில் நெடுமாறன் வெளியிட மறைந்த கவிஞர் இன்குலாப் பெற்றுக்கொண்டார். நான் முதல் தடவை பேசிய அதே விதத்தில் பிரதமரிடம் நேரடியாக கொடுத்த குற்றச்சாட்டுக்கள், நேரடியாக கொடுத்த கடிதங்கள் அந்த தொகுப்புதான் அந்த நூல். இது எல்லோருக்கும் கிடைக்கும். எல்லோருக்கும் தெரியும். அதன் பிறகு என் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நடைபெற்றது. 

 


 

 

 

இப்படிப் பேசினீர்களா என்று நீதிபதி கேட்டார். ஆமாம் பேசினேன். இந்திய ஒருமைப்பாடு சிதைந்துவிடக்கூடாது. இந்திய இறையாண்மை சிதைந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் பேசினேன். ஒருமைப்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் குற்றச்சாட்டுக்களை வைத்தேன். நான் எதையும் மறுக்கவில்லை. இது ஒன்றும் தேசத்துரோகம் கிடையாது. ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டதற்கு, ஈழத்தமிழனத்திற்காக போராடுகிற விடுதலைப்புலிகளைப் பற்றி பேசுவதற்கு, நாடாளுமன்றத்தில் பேசினேன் அதற்காக 19 மாதம் சிறையில் இருந்தேன். வேலூர் சிறையில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு ரிட் மனு தாக்கல் செய்தேன். தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமா என்று ரிட் மனு தாக்கல் செய்தேன். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல என்று தீர்ப்பளித்தார்கள். 
 

எங்கள் சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ் இந்த வழக்கை நடத்தினார். இன்றைக்கு தீர்ப்பு நாள். நீதிபதி அவர்கள், நீங்கள் குற்றவாளி என்று நான் தீர்ப்பளிக்கிறேன். தண்டனை குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டார். தண்டனையை சீக்கிரம் அறிவித்துவிட்டால் நல்லது என்று சொன்னேன். ஒரு வருடம் சிறை தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதம் என்று சொன்னார். 
 

தீர்ப்பை வாங்கி வாசித்து பார்த்தோம். அதில் ஒரு இடத்தில், குறைந்த பட்ச தண்டனையை கொடுக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்ட வைகோ கேட்டுக்கொண்டதாக எழுதியிருந்தார். என் தலையில் இடி விழுந்ததைப்போல் இருந்தது. நான் நீதிபதியை பார்த்து கேட்டேன். நான் தண்டனையை குறைக்கச்சொல்லி ஒருபோதும் சொல்லவில்லை. அதிகபட்ச தண்டனை எவ்வளவு உண்டோ, ஆயுள் தண்டனை கொடுங்கள் ஏற்றுக்கொள்வேன். 

 

vaiko


'குறைந்த பட்ச தண்டனையை கொடுங்கள்' என்று நான் சொல்லாத வார்த்தை இருக்கிறது. இந்த தீர்ப்பை எழுத வேண்டும் என்றால் நீதிபதி உள்ளத்தில் விஷம் இருக்கிறது. நீதிபதியின் மனதில் உள்ளத்தில் நஞ்சும், விஷமும் இல்லாவிட்டால் இந்த வார்த்தையை எழுதியிருக்க முடியாது. எவ்வளவு தண்டனை கொடுத்தாலும், ஆயுள் தண்டனையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். 
 

தொடர்ந்து விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசிக்கொண்டுதான் இருப்பேன். இளைஞர்களின் உள்ளத்தில் இதனை விதைத்துக்கொண்டிருப்பதினால் இந்த தண்டனை என்று தீர்ப்பில் எழுதியிருக்கிறார். விதைப்பேன். விதைத்துக்கொண்டே இருப்பேன். பேசுவேன். ஆயுள் தண்டனை என்றாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு செல்வேன். நான் பெரியாரின் வழியில் வந்தவன். 1938ல் சென்னை நீதிமன்றத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பெரியாருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிப்பதற்கு முன்பு நீதிபதியை பார்த்து சொன்னார், அதிகபட்ச தண்டனை எவ்வளவு உண்டோ அதனை கொடுங்கள் என்று சொன்னார். நான் அந்த வழியில் வந்தவன். ஆயுள் தண்டனை என்றாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறவன். நான் செய்தது தேசத்துரோகம் அல்ல. இது தேசத்துரோகம் என்றால் இதனை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். 
 

மீண்டும் உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்காது என்று பேசியவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
 

நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
 

 


 

சார்ந்த செய்திகள்