Skip to main content

காங்கிரசின் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிப்பு எப்போது?

Published on 16/03/2021 | Edited on 16/03/2021

 

ddd

 

காங்கிரசில் இன்னும் 4 தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அனேகமாக இன்று (16.03.2021) அறிவிப்பதற்கான பகீரத முயற்சியை எடுத்துள்ளார் தமிழக தேர்தல் பொறுப்பாளர் திக் விஜயசிங். ’’திமுக கூட்டணியில் 25 இடங்களைப் பெற்ற காங்கிரஸ், 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. 

 

விளவங்கோடு, குளச்சல், மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய 4 தொகுதிகளுக்கு கடந்த 3 நாட்களாக ஏக இழுபறி. இதில் விளவங்கோடு தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கும், குளச்சல் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. பிரின்சுக்கும் மீண்டும் சீட் தரக்கூடாது என கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வந்ததால் முடிவெடுக்க முடியாமல் தடுமாறினர். 

 

அதேபோல, மயிலாடுதுறையில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க காங்கிரஸ் தமிழக தலைமை விரும்பியது. ஆனால், முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர், ‘எனது ஆதரவாளர் ராஜ்குமாருக்காக திமுகவிடம் சொல்லி நான் வாங்கினேன். எனக்காகத்தான் திமுக ஒதுக்கியது. எனது கோட்டாவை வேறு நபருக்கு எப்படி விட்டுத்தர முடியும்?’ என பஞ்சாயத்து பண்ணியதால் சோனியா காந்தி வரை பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது. சோனியா தலையிட்டும் மணிசங்கர் அய்யர் சமாதானமாகவில்லையாம். இருப்பினும் மயிலாடுதுறை மல்லுக்கட்டு சீரியசாகியிருக்கிறது. 

 

அதேபோல, வேளச்சேரி தொகுதியை முன்னாள் எம்.பி. ஹாருனின் மகன் அசன் மவுலானாவுக்கு ஒதுக்கீடு செய்ய கே.எஸ். அழகிரி விரும்புகிறார். முஸ்லிம் பிரதிநிதித்துவம் கொடுத்த மாதிரியும் இருக்கும்; இளைஞர் ஒருவருக்கு கொடுத்த மாதிரியும் இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், வேளச்சேரியை சி.டி. மெய்யப்பனுக்கு ஒதுக்கீடு செய்ய விரும்புகிறது மேலிடம். இதனால், வேளச்சேரியில் யாரை நிறுத்துவது என்பதிலும் முடிவு எடுக்க முடியாமல் திணறியது காங்கிரஸ்” என்கிறது சத்தியமூர்த்தி பவன்.   

 

கடைசி நேரம்வரை வேட்பாளர்களை அறிவிப்பதை இழுத்துக்கொண்டே இருப்பது காங்கிரஸுக்கு புதிதல்ல என்பதால் ரிலாக்ஸாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்