tn assembly election results dmk chief mkstalin statement

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுககூட்டணி 149 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 84 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

இந்த நிலையில், திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகசட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 30 விழுக்காட்டிற்கும் குறைவான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. பெரும்பான்மைத் தொகுதியில் திமுககூட்டணிக் கட்சிகள் முன்னிலை வகித்து வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டிருப்பதையே தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக மாலையில் இருந்து வரத் தொடங்க உள்ளன. ஆட்சி அமைக்க இருப்பது திமுகதான் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள நமது நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மிக மிக விழிப்புணர்வுடன் இருந்து வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது குளறுபடிகள் நடந்துவிடாமல் தடுக்க வேண்டும். பெரிய குளறுபடிகள் எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், எங்காவது ஒரு அதிகாரி, அதைச் செய்துவிடக் கூடும் என்பதால் அதிக கவனம் அவசியம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாக்கு எண்ணிக்கை மையத்தைவிட்டு வெளியே வரக்கூடாது. எதிர் அணியினர் வாக்கு எண்ணிக்கையினை சீர்குலைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Advertisment

ஏதேனும் காரணம் காட்டி வெற்றிச் சான்றிதழை வழங்கக் காலதாமதம் செய்தால், உடனடியாகத் தலைமையைத் தொடர்புகொள்ளவும். வெற்றிச் சான்றிதழ் பெறும் வரைக்கும் எக்காரணம் கொண்டும் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்தைவிட்டு வெளியேறக் கூடாது. வாக்கு எண்ணிக்கையை முழுமையாக முடித்து, வெற்றிச் சான்றிதழைப் பெறுவதிலேயே குறியாக இருக்க வேண்டும்.

நமது வெற்றி என்பது உறுதிசெய்யப்பட்ட வெற்றியாகும். இருப்பினும் கரோனா என்ற பெருந்தொற்று காலம் என்பதால், தொண்டர்கள் அனைவரும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். வெற்றிக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று நான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்தேன். பெருந்தொற்று தொற்றிக்கொள்ளவும், பரவவும் காரணம் ஆகிவிடக்கூடாது. பட்டாசு வெடிப்பது போன்ற கொண்டாட்டங்களைத் தவிர்க்கவும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் புதியதோர் அத்தியாயம் தொடங்க இருக்கிறது. நம்மையும் பாதுகாத்து, நாட்டையும் பாதுகாப்போம்!" இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.