ADVERTISEMENT

பா.ம.க.வுக்கு 'மாம்பழம்' சின்னம் ஒதுக்கீடு!

05:18 PM Mar 06, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 06- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. த.மா.கா., தே.மு.தி.க., புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் கே.பி.முனுசாமி எம்.பி., வைத்தியலிங்கம் எம்.பி. உள்ளிட்டோர் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் தி.மு.க.வின் தொகுதிப் பங்கீட்டுக் குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், 'மாம்பழம்' சின்னம் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு பா.ம.க. விண்ணப்பம் செய்திருந்தது. அதனைப் பரிசீலித்த இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியுள்ளது. மேலும், இது தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் பா.ம.க. வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 23 சட்டமன்றத் தொகுதிகளிலும் 'மாம்பழம்' (தனிச் சின்னத்தில்) போட்டியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அ.தி.மு.க. தலைமை பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பாக சென்னை நட்சத்திர ஹோட்டலில் பா.ம.க. நிர்வாகிகள் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றன.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT