tn assembly election dmk and mdmk party leaders discussion

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க.- ம.தி.மு.க. இடையே இழுபறி நீடிக்கும் நிலையில், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தி.மு.க.வின் தொகுதிப் பங்கீட்டுக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் ம.தி.மு.க.வின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ம.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மல்லை சத்யா, "ம.தி.மு.க.வுக்கான அங்கீகாரத்தைத் தர வேண்டும் என தி.மு.க.விடம் கேட்டுள்ளோம். தி.மு.க.வுடன் தொகுதிஉடன்பாடு எட்டப்படவில்லை. கடந்த பேச்சுவார்த்தையின் போது தி.மு.க. தரப்பில் என்ன சொன்னார்களோ, அதையேதான் இப்போதும் சொன்னார்கள். தி.மு.க. குறிப்பிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ம.தி.மு.க.- தி.மு.க. கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு தி.மு.க. மீண்டும் அழைக்கும்" என்றார்.

கூட்டணியில் உள்ள, இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளையும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க. தலைமை ஒதுக்கியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.