Skip to main content

அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகம் நிறைவு!

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணலை தி.மு.க. தொடங்கியுள்ளது. 

 

அதேபோல், சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் கடந்த பிப்ரவரி 24- ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (03/03/2021) மாலை 05.00 மணியுடன் நிறைவு பெற்றது. கடைசி நாளான இன்று (03/03/2021) விருப்ப மனுவைப் பெற அ.தி.மு.க. அலுவலகத்தில் தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்தனர். 

 

சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 8,150-க்கும் அதிகமான விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டதாக அ.தி.மு.க. தலைமை தெரிவித்துள்ளது. இதில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இதுவரை 7,000- க்கும் மேற்பட்டோர் பேர் சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மனு அளித்தவர்களிடம் நாளை (04/03/2021) காலை 09.00 மணி முதல் நேர்காணலை நடத்தும் அ.தி.மு.க., அனைத்துச் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களுக்கான நேர்காணலை ஒரே நாளில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. 

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இரண்டு அல்லது மூன்று நாட்களில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் அதிமுக வேட்பாளர்களை தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 

 

 

சார்ந்த செய்திகள்