TN ASSEMBLY ELECTION ADMK AND DMK CANDIDATES

‘நாங்க அடிக்கிற மாதிரி அடிக்கிறோம்; நீங்க அழற மாதிரி அழுங்க!’ என்று பேசி வைத்துக்கொண்டு அறிவித்தது போல் இருக்கிறது, சில முக்கியத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க.- அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்!

Advertisment

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் “வேட்பாளர் பட்டியலே முதல் கதாநாயகன்” எனச் சொல்கிறார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில், அவருக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் சம்பத்குமார், அப்படி ஒன்றும் ‘டஃப்’ கொடுக்கக்கூடிய வேட்பாளர் இல்லை என்கிறார்கள், அத்தொகுதியின் தட்பவெப்பம் அறிந்த உ.பி.க்கள்.

Advertisment

TN ASSEMBLY ELECTION ADMK AND DMK CANDIDATES

முதல்வர் வேட்பாளரான மு.க.ஸ்டாலின் நிற்கும் கொளத்தூர் தொகுதியில், அவரை எதிர்த்து நிற்க, கொளத்தூர் தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத, தென் சென்னை பகுதியைச் சேர்ந்த ஆதிராஜாராமை களமிறக்கியிருக்கிறது ஆளும்கட்சி. அவரோ ‘கேட்டது ஆயிரம் விளக்கு; கிடைத்ததோ கொளத்தூர்’ என்று புலம்புகிறாராம். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி திமுக வேட்பாளரான உதயநிதி ஸ்டாலினுக்குப் போட்டியாக கோதாவில் தள்ளி விடப்பட்டுள்ளார், பா.ம.க. வேட்பாளரான கஸ்ஸாலி.

தி.மு.க.வில் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வகிக்கும் ஐ.பெரியசாமியை, ஆத்தூர் தொகுதியில் எதிர்த்துப் போட்டியிட தேர்வாகியுள்ள பா.ம.க. வேட்பாளர், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நான்கு மாவட்டங்கள் தள்ளியிருக்கும் விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்தவர். ஆரியநல்லூரில் நடந்த பா.ம.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியினர் யாருமே பங்கேற்கவில்லை.

Advertisment

TN ASSEMBLY ELECTION ADMK AND DMK CANDIDATES

மதுரை மத்தியதொகுதியின் தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை எதிர்த்துப் போட்டியிடுவது, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பசும்பொன் தேசிய கழகத்தின் நிறுவனரான ஜோதி முத்துராமலிங்கம். ‘தேவர் வழித் தோன்றல்’ என்பதாலோ என்னவோ, விருதுநகர் மாவட்டம், புலிச்சகுளத்தைச் சேர்ந்த இவரை, மதுரை மத்திய தொகுதியில் நிறுத்தியிருக்கின்றனர்.

திருச்சுழி தொகுதியின் தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசுவுக்குப் போட்டியாக, அ.தி.மு.க. கூட்டணி,களத்தில் இறக்கியிருப்பது, மூவேந்தர் முன்னணி கழகத்தின் பொதுச்செயலாளரான எஸ்.ஆர். தேவரை. ‘மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வரும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை இந்தத் தேர்தலில் தோற்கடிப்போம்!’ என்று தொடர்ந்து சூளுரைத்துவிட்டு, ராஜபாளையம் தொகுதியின் சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனையே, அக்கட்சி மோதவிட்டுள்ளது. தூத்துக்குடி சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவனை எதிர்த்துப் போட்டியிடுவது, த.மா.கா. வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலன்.

TN ASSEMBLY ELECTION ADMK AND DMK CANDIDATES

வேட்பாளர் தேர்வில் இரு கழகங்களும் காட்டிய அக்கறையை(?), ஒவ்வொரு தொகுதியாகச் சொல்லிக்கொண்டே போகலாம். வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும்போது, தேர்தல் களத்தில் புலியைப் பின்னுக்குத் தள்ளிய பூனைகள் உண்டென்றாலும், முன்பு வாய்ச் சொல்லில் காட்டிய வீரம், வேட்பாளர் அறிவிப்பில் காணாமல் போனதுஅப்பட்டமாகவே தெரிகிறது.

இதைத்தான் ‘இரு பெரிய கட்சிகளுக்கிடையிலான அட்ஜஸ்ட்மென்ட்’ என்று அந்தந்த கட்சியினரே ‘கமெண்ட்’ அடிக்கின்றனர்.