Skip to main content

புலிகளைப் பாதுகாக்க வனப்பரப்புகள் சுருக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்... சீமான் கோரிக்கை!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020

 

seeman

 

சுற்றுச்சூழலின் குறிகாட்டியாக, பல்லுயிர்ப்பெருக்கத்தின் கண்ணியாக விளங்கும் புலிகளின் எண்ணிக்கைக் குறைவதைத் தடுக்க வனப்பகுதிகளின் பரப்பு சுருக்கப்படுவதைத் தடுக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாம் வாழும் இப்பூவுலகு என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதன்று; அது அனைத்து உயிர்களுக்குமானது. ஒருசெல் உயிரினம் முதல் மனிதன்வரை எல்லா உயிர்களுக்கும் சமவுரிமையை வழங்கி பொதுவாய் திகழுவதே இயற்கையின் அளப்பெரும் நியதியாகும். எல்லாவற்றையும் கொடையாக அள்ளித்தரும் இப்பூமியை நாம் வாழ்ந்து முடித்துச் செல்கிறபோது பத்திரமாகப் பேணிப்பாதுகாத்து அடுத்தத் தலைமுறைக்கு முழுவதுமாய்க் கையளித்துவிட்டுச் செல்ல வேண்டியது மானுடக்கடமை என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

 

எல்லாத் தலைமுறைக்குமான இந்நிலத்தையும், அதன் வளத்தையும் இத்தலைமுறையிலேயே மொத்தமாய்த் தின்று தீர்ப்பதையும், அனைத்துயிர்களுக்குமான பூமியை மனிதன் மட்டுமே சொந்தம் கொண்டாடி சுரண்டிக் கொழுப்பதையும் ஒருநாளும் ஏற்க முடியாது. அதனையுணர்ந்து தெளிந்து காக்க முன்வர வேண்டும் என்பதே உலகின் அத்தனை சூழலியல் ஆர்வலர்களும், இயற்கைப் பேரறிஞர்களும் மாந்தகுலத்திற்கு அறிவுறுத்துகிற பெருஞ்செய்தியாகவும், விடுக்கிற எச்சரிக்கையாகவும் இருக்கிறது. மனிதர்கள் போலவே புழு, பூச்சி, வண்டு, காகம், சிட்டு, மான், மயில், சிங்கம், புலி என எல்லா உயிரினங்களும் இப்பூமியில் வாழ்வதற்கான தார்மீக உரிமையினைக் கொண்டுள்ளன. மனிதர்களின் கட்டற்ற அதீத நுகர்வாலும், வளர்ச்சி எனும் பெயரில் மேற்கொள்ளப்படும் பெரும் வளச்சுரண்டலாலும் பல்லுயிர்ச்சூழலும், சுற்றுச்சூழல் மண்டலமும் இன்று பேரழிவை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது.

 

இன்று உலகளாவிய புலிகள் தினம். பல்லுயிர்ச்சூழலின் முக்கியக் கண்ணியாக விளங்கும் புலிகள் இன்றைக்கு அரிதான உயிரினமாக மாறிக் கொண்டிருக்கின்றன. மாறிவரும் நிலவியல் கொள்கைகளாலும், முடிவுகளாலும் வனப்பகுதி சுருங்குவதால் புலிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதாக தேசிய புலிகள் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுக்கிறது. புலிகளைப் பாதுகாக்க நடவடிக்கை பல ஆண்டுகளாக எடுக்கப்பட்ட போதிலும், வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடுதல் போன்றவைகள் புலிகளின் உயிர்வாழலுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கின்றன. புலி பாகங்கள் பாரம்பரிய சீன மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன, புலி தோல் அலங்கார மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காகவும், புலி எலும்புகள் மீண்டும் உடல் வலியை குணப்படுத்த மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் தேசிய விலங்காகக் கொண்டாடப்படும் புலிகள் வாழ்வதற்கு நிலமும், வனமுமற்று மனிதர்கள் வாழும் பகுதிகளில் உட்புகும் செய்திகள் தற்காலச்சூழலின் பேராபத்தைத் தெளிவுப்படுத்துகின்றன.

 

ஒரு வனத்தில் புலிகள் மிகுந்து இருக்கிறதென்றால், அவை வாழ்வதற்கேற்ற நீர், உணவு, பாதுகாப்பான வனம், உலவுவதற்கான பரந்த நிலம் யாவும் கிடைக்கப் பெறுவதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. சர்வதேசப்புலிகள் பாதுகாப்பு அமைப்பின் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, புலிகள் பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மிக முக்கியக் குறிகாட்டிகளாகும். சுற்றுச் சூழலமைப்பின் மேலாதிக்க வேட்டையாடுபவையாக இருப்பதால், மான் போன்ற விலங்குகள் உண்ணும் தாவர வகைகளின் எண்ணிக்கை சீரானதாக இருப்பதை அவைகள் உறுதி செய்கின்றன. புலிகளின் எண்ணிக்கையில் செங்குத்தான வீழ்ச்சி, தாவரவகையின் தொகை விழுக்காடு அழிய வழிவகுக்கும். புலிகள் எண்ணிக்கை குறைவதன் மூலம் மான்கள் உண்ணும் இத்தாவரங்களின் விழுக்காடு அதிகரிப்பதனால் வனப்பகுதியில் அது பெரும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, உணவுச் சங்கிலியைக் காப்பாற்றுவதிலும், பல்லுயிர்ப் பெருக்கத்தைத் தக்க வைப்பதிலும் புலிகள் மிக முக்கியக் கண்ணியாக விளங்குகிறது. புலிகள் வாழ்வதற்கேற்ற சூழல் அற்றுப்போய் அவைகள் அழிவதன் மூலம் மிகப்பெரும் சூழலியல் பேரழிவை வனங்கள் எதிர்கொள்ள நேரிடும். ஆகவேதான், புலிகளைக் காக்க வேண்டியது பேரவசியமிருக்கிறது. புலிகளின் அழிவென்பது ஒரு விலங்கினத்தின் அழிவல்ல; அது ஒரு வனத்தின் அழிவு. இந்தியாவிலுள்ள காடுகளில் மொத்தமாக 2,967 புலிகளே இருக்கின்றன என்பதன் மூலம் எவ்வளவு அழிவின் விளிம்பில் நிற்கிறோம் என்பதை ஆட்சியாளர்களும், பொது மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். உலகப் புலி மக்கள் தொகையில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளது. எனவே, புலிகள் பாதுகாப்பில் இந்நாட்டிற்கு முக்கியப் பங்கு உண்டு.

 

ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 33 விழுக்காடு காடுகள் இருந்தால்தான் அந்நாடு சுற்றுச்சூழலைப் பேண முடியும் என்கிறது சூழலியல் ஆய்வறிக்கைகள். ஒரு மனிதனுக்கு 422 மரங்கள் தேவை ஆனால் இந்தியாவில் ஒருமனிதனுக்கு வெறும் 28 மரங்களே உள்ளன என்ற செய்தி காடுகளை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதைச் சொல்கிறது. நாம் வாழும் இந்தப் பூமியைப் பாதுகாப்பதிலும், நாம் சுவாசிக்கத் தேவையான உயிர்க்காற்றை உற்பத்தி செய்து தருவதிலும், மாசைக் கட்டுப்படுத்திச் சூழலைச் சமநிலை அடையச் செய்வதிலும் காடுகளே நிகரற்றப் பணியைச் செய்கின்றன. காடுகளே நீரை தன் வேர்களில் தேக்கி நதிகளின் தாயாக விளங்குகிறது. அக்காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலக உயிரினங்களையே பாதிக்கும் பேரழிவாகும். அக்காடுகளைப் பாதுகாத்துத் தரும் புலிகளைக் காக்க வேண்டியது தலையாயக் கடமையாகும்.

 

http://onelink.to/nknapp

 

ஆகவே, பல்லுயிர்ப்பெருக்கத்திற்கும், சூழலியல் சமநிலைக்கும் பெரும்பாங்காற்றும் புலிகளைக் காக்க அதிகப் புலிகளைப் பாதுகாக்கும் வனங்களை உருவாக்க வேண்டும் எனவும், அவைகள் வாழும் வனப்பரப்புகள் சுருக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமெனவும், காடுகளை அழிக்கவும், இயற்கையைச் சுரண்டவும் வழிவகுக்கும் சட்டங்களையும், முடிவுகளையும் திரும்பப் பெற வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.