
அதிமுகவின் முப்பெரும் விழாவினைக் கொண்டாடவும்,தனது பலத்தை நிரூபிக்கவும் திருச்சியில் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தார் ஓபிஎஸ். திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய ஓபிஎஸ்-இன் தீவிர ஆதரவாளர் வைத்திலிங்கம், '' 'பார் சிறுத்ததால் படை பெருத்ததோ; படை பெருத்ததால் பார் சிறுத்ததோ' என்று பாரதிதாசன் கூறுவார். அதுபோல்'திருச்சி சிறுத்ததால் ஓபிஎஸ் படை பெருத்ததோ; ஓபிஎஸ் படை பெருத்ததால் திருச்சி சிறுத்ததோ' என்ற வரிகளுக்கு ஏற்ப வங்கக் கடலும் அரபிக்கடலும் இந்து மகா சமுத்திரமும் ஒன்றாக சங்கமித்தது போல் மக்கள் கடல் இங்கே திரண்டு இருப்பதை பார்க்கும் பொழுது ஆயிரம் எடப்பாடி வந்தாலும் ஒரு ஓபிஎஸ்க்கு சமம் இல்லை. இந்தக் கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களை மதிக்காதவன் அழிந்து போவான். நிச்சயமாக இதற்கு தர்மம் பதில் சொல்லும். மலை குலைந்தாலும் நிலை குலையாமல் மாண்போடு இருக்கின்ற ஓபிஎஸ், நாலு பக்கமும் இருந்து அம்புகள் வந்தாலும் புன்னகையால் அதை சிதறடிக்க கூடிய ஆற்றல் பெற்றவர்.
பொறுமைக்கு எடுத்துக்காட்டு என ஜெயலலிதா சொன்னார். ஒரு பதவியை ஒருவரிடம் ஒருவரிடம் கொடுத்துவிட்டால் திருப்பிக் கொடுப்பார்களா? இருக்காது என்பது வரலாறு. அதை திருப்பிக் கொடுத்தவரே ஓபிஎஸ்தான் என்று ஜெயலலிதா சொன்னார். ஒருமுறை அல்ல மூன்றுமுறை கொடுத்த முதலமைச்சர் பதவியை திருப்பிக் கொடுத்தபரதன் ஓபிஎஸ். சரஸ்வதி சபதம் என்ற படத்தில் கே.ஆர்.விஜயா பிச்சைக்கார பெண்ணாக நடிப்பார். அவரை யானை மாலையிட்டு ராணிஆகுவார். ராணி ஆனவுடன் திமிர் அதிகமாக இருக்கும். அதை அடக்குவார்கள். அதுபோல எடப்பாடியின் திமிரை தொண்டர்கள் நீங்கள் தான் அடக்க வேண்டும்.
ஜெயலலிதாவிற்கும், எம்.ஜி.ஆருக்கும் யார் துரோகம் செய்தாலும் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். எம்ஜிஆர் வகுத்த விதிகளை, ஜெயலலிதா கட்டிக் காத்த விதியை காலில் மிதித்து, ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்பதை ரத்து செய்த எடப்பாடி பழனிசாமிக்கு நாம் தண்டனை கொடுத்தாக வேண்டும்.இன்று எடப்பாடி பழனிசாமி முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டிருக்கிறார். கொடநாடு கொள்ளை நடந்த நாள் ஏப்ரல் 24 இன்று. 2017 ஏப்ரல் 24ஆம் தேதி தேதிதான் அது நடந்தது. அந்த நாளில் தான் இந்த மாநாடு நடக்கிறது. அந்த குற்றவாளி யாராக இருந்தாலும் அவர் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் இறைவன் தண்டிப்பான்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)