Advertisment

பெண்களை மிகக்கேவலமாக இழிவுசெய்யும் மனுஸ்மிருதியைத் தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் 

vck

பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதிக் குடிகளையும், குறிப்பாக பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்துவதும் வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடை செய்ய வேண்டும் என மைய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 24.10.2020 சனிக்கிழமையன்று மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுஸ்மிருதி, அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுகிறது. அவர்களைக் கொலைசெய்வதையும் நியாயப்படுத்துகிறது.

Advertisment

குறிப்பாக, பெண்கள் அனைவரையும் மிக மிகக் கேவலமாக சித்தரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட வர்ணம் அல்லது சாதியைத்தவிர மற்ற எவரும் இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதாகப் பேசுகிறது. அதன் காரணமாகவே புரட்சியாளர் அம்பேத்கர் 1927ஆம் ஆண்டிலேயே அதைத் தீயிட்டுக் கொளுத்தினார். அத்துடன், அவருடைய நூல்கள் பலவற்றிலும் மனுஸ்மிருதியின் மனிதகுல விரோத கருத்துக்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

அதுபோலவே தமிழ்நாட்டில் தந்தைபெரியார் அவர்களும் மனுஸ்மிருதியை எரித்துள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் மனுஸ்மிருதி இந்த நாட்டின் சட்டம் என்ற நிலையை இழந்தது. அதன் பிறகுதான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை ஏற்பட்டது.

தற்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள சனாதன சக்திகள் மீண்டும் மனுஸ்மிருதியின் அடிப்படையில் இந்நாட்டின் ஆட்சி முறையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள். அதன் காரணமாகவே இன்றைய சனாதனிகளின் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுகின்றன. இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

தற்போது இந்தியாவை ஆட்சி செய்வது புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டமா? அல்லது மனுஸ்மிருதியா? என்னும் கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு மனுஸ்மிருதியை தர்ம நூலாக ஏற்றுக்கொண்ட சனாதனிகள் ஆட்சி நடத்துவதே காரணம். மனுஸ்மிருதி என்ற ஒரு நூல் நாட்டில் இருக்கும் வரை இந்த சனாதனிகளின் மனிதகுல விரோத வெறுப்புப் பிரச்சாரத்தை நிறுத்தவே முடியாது.

எனவே, வெறுப்புப் பிரச்சாரத்தின் ஊற்றுக்கண்ணாகவும், பெண்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்தும் நூலாகவும் விளங்குகின்ற மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வேண்டும் என்று மீண்டும் குரலெழுப்ப வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் வழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கும் ‘மனுநூலைத் தடைசெய்!’ என்ற இந்த அறப்போராட்டத்திற்கு சமூகநீதி மற்றும் சமத்துவத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

protest Thirumavalavan vck
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe