Skip to main content

பெண்களை மிகக்கேவலமாக இழிவுசெய்யும் மனுஸ்மிருதியைத் தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் 

Published on 23/10/2020 | Edited on 23/10/2020
vck

 

பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதிக் குடிகளையும், குறிப்பாக பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்துவதும் வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத்  தடை செய்ய வேண்டும் என மைய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 24.10.2020 சனிக்கிழமையன்று மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுஸ்மிருதி, அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுகிறது. அவர்களைக் கொலைசெய்வதையும் நியாயப்படுத்துகிறது. 

 

குறிப்பாக, பெண்கள் அனைவரையும் மிக மிகக் கேவலமாக சித்தரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட வர்ணம் அல்லது சாதியைத்தவிர மற்ற எவரும் இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதாகப் பேசுகிறது. அதன் காரணமாகவே புரட்சியாளர் அம்பேத்கர் 1927ஆம் ஆண்டிலேயே அதைத் தீயிட்டுக் கொளுத்தினார். அத்துடன்,  அவருடைய நூல்கள் பலவற்றிலும் மனுஸ்மிருதியின் மனிதகுல விரோத கருத்துக்களை  அம்பலப்படுத்தியுள்ளார்.

 

அதுபோலவே தமிழ்நாட்டில் தந்தைபெரியார் அவர்களும் மனுஸ்மிருதியை எரித்துள்ளார். 

 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் மனுஸ்மிருதி இந்த நாட்டின் சட்டம் என்ற நிலையை இழந்தது. அதன் பிறகுதான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை ஏற்பட்டது. 

 

தற்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள சனாதன சக்திகள் மீண்டும் மனுஸ்மிருதியின் அடிப்படையில் இந்நாட்டின் ஆட்சி முறையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள். அதன் காரணமாகவே இன்றைய சனாதனிகளின் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுகின்றன. இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. 

 

தற்போது இந்தியாவை ஆட்சி செய்வது புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டமா? அல்லது மனுஸ்மிருதியா? என்னும் கேள்வி  எழுந்துள்ளது.

 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு மனுஸ்மிருதியை தர்ம நூலாக ஏற்றுக்கொண்ட சனாதனிகள் ஆட்சி நடத்துவதே காரணம். மனுஸ்மிருதி என்ற ஒரு நூல் நாட்டில் இருக்கும் வரை இந்த சனாதனிகளின் மனிதகுல விரோத வெறுப்புப் பிரச்சாரத்தை நிறுத்தவே முடியாது.

 

எனவே, வெறுப்புப் பிரச்சாரத்தின் ஊற்றுக்கண்ணாகவும், பெண்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்தும் நூலாகவும் விளங்குகின்ற மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வேண்டும் என்று மீண்டும் குரலெழுப்ப வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும். 

 

புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் வழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கும் ‘மனுநூலைத் தடைசெய்!’ என்ற இந்த அறப்போராட்டத்திற்கு சமூகநீதி மற்றும் சமத்துவத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.