Skip to main content

கடிதம் எழுதிய சிறிது நேரத்தில் மரணமடைந்த அறிவாலய தொண்டர்! கடிதத்தைப் பார்த்து கலங்கிய உதயநிதி!

thiruvarur kandasamy dmk

 

உடன்பிறப்புகளால் அத்தனை எளிதாக அந்த முகத்தை மறக்க முடியாது. அறிவாலயத்தில் எந்த விழா என்றாலும் அவர் முன்கூட்டியே வந்துவிடுவார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பார். கட்சிப் பிரமுகர்களை வரவேற்று, உரிய இடத்தில் உட்கார வைப்பார். மேடையில் இருப்போருக்கு உதவிகள் செய்வார். கலைஞர், பேராசிரியர், ஸ்டாலின் என அனைவரும் அறிந்த கந்தசாமிக்கு மற்றொரு பெயர், அர்ப்பணிப்பு.

 

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி, தென்சென்னை மாவட்ட இலக்கிய அணியில் பொறுப்பில் இருந்தார். சென்னையில் தி.மு.க நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அதனைத் தெரிந்துகொண்டு அங்கு சென்று விடுவார். டீ, காபி தனித்தனி ஃப்ளாஸ்க்கில் இருக்கும். அதில் சர்க்கரை போட்டது, போடாதது எனத் தனித்தனியாக வீட்டிலிருந்தே தயாரித்து எடுத்துச் செல்வது கந்தசாமியின் வழக்கம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், சிறப்பு விருந்தினர்களுக்குத் தருவார். கூட்டம் தொடங்கி சற்று தாமதமாக வரும் நிர்வாகிகளை முன் வரிசையில் உட்கார வைப்பதற்காகவே சில நாற்காலிகளைத் தனியாக எடுத்து வைத்திருப்பார். யாரிடமும் பாகுபாடு பார்க்க மாட்டார்.

 

கட்சி நிகழ்ச்சிகள், பிரமுகர்கள் வீட்டுத் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கான பத்திரிகைகளை அவரே வீடு வீடாகச் சென்று கொடுப்பார். நிர்வாகிகளின் பிறந்தநாளில் நேரடியான முதல் வாழ்த்து கந்தசாமி பரிசளிக்கும் புத்தகமாகத்தான் இருக்கும். சால்வைக்குப் பதில் புத்தகம் கொடுங்கள் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொன்னதை வேதப்புத்தகமாகக் கருதி செயல்பட்டவர் கந்தசாமி. கட்சிக்காரர்களுக்கு உடன்பிறப்பு என்ற சொல்லின் அர்த்தத்தைத் தன் செயல்பாடுகளால் உணர்த்தியவர்.

 

கரோனா காலத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டதால், யாரிடமும் சொல்லாமல் சென்னை ஜி.ஹெச்சில் அட்மிட்டானார் கந்தசாமி. கட்சி நிகழ்ச்சிகளுக்கு முரசொலி நிருபர் வர இயலாத சூழலில், கந்தசாமியே அந்த நிகழ்ச்சி பற்றியும் அதில் பங்கேற்றவர்கள் பற்றியும் எழுதி அனுப்புவார். அதுபோல, ஜி.ஹெச்.சில் அட்மிட்டானதையும், தி.மு.க.வில் தன்னுடைய பங்களிப்பைப் பற்றியும் முரசொலிக்கான குறிப்பாக ஒரு தாளில் எழுதினார். அதனை எழுதிய சிறிது நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார் கந்தசாமி.

 

அதிர்ச்சித் தகவல் அறிந்து தி.மு.கவினர் கண்ணீர் வடித்தனர். வர்த்தகஅணி மூலம் செய்தி அறிந்த தயாநிதி மாறன் எம்.பி தனது செயலாளர் கவுதம் மூலம் உரிய உதவிகளை மேற்கொண்டார். இளைஞரணிச் செயலாளரும் முரசொலி எம்.டி.யுமான உதயநிதி மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தி, கந்தசாமியின் கடிதத்தைப் பார்த்துக் கலங்கினார்.

 

http://onelink.to/nknapp

 

சென்னை தெற்கு மா.செ. சுப்ரமணியம், வர்த்தகர் அணிச் செயலாளர் காசி முத்துமாணிக்கம், துணைச் செயலாளர் வி.பி.மணி உள்ளிட்டோர் கந்தசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அவரது உடலைச் சொந்த ஊர் கொண்டு செல்ல உதவினர்.

 

அறிவாலயத் திருச்சேவை தவிர வேறெதுவும் அறியாத அந்தத் தொண்டனின் உடல் சுமந்த வாகனத்தை, அறிவாலய வாசலில் சில நிமிடங்கள் நிறுத்தி கொண்டு போகச் செய்தார் வர்த்தக அணி துணைச் செயலாளர் வி.பி.மணி.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்