Skip to main content

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்... விவசாயிகள் அறிவிப்பால் திருவாரூரில் பரபரப்பு... 

Published on 28/08/2020 | Edited on 28/08/2020
wwwwwqqqqq

 

 

காவிரி உபரிநீர் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக முதல்வரை கண்டித்து வரும் 8ம் தேதி ஒன்றியம், மற்றும் நகரங்களில் கருப்புக்கொடி ஏந்தியபடி கண்டன ஆர்பாட்டம் செய்யப்போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக்குழு கூத்தாநல்லூரில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சிவபுண்ணியம், முன்னாள் எம்,எல்,ஏ உலகநாதன் உள்ளிட்ட விவசாய சங்க  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் 8ம் தேதி ஒன்றிய நகரங்களில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாநில துணை செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, "திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் பிரச்சனைகள் மிகப்பெரிய கொந்தளிப்பில் இருக்கிறது. மேட்டூரில் இருந்து உபரிநீர் எடுப்பது என்ற பெயரில் சேலத்தில் 100 ஏரிகளுக்கு மேலாக தூர் வாரப்பட்டு தண்ணீர் கொண்டு செல்வதும், நீரேற்றும் கால்வாய் திட்டம் என்ற பெயரில் ராட்சத மோட்டார்களை கொண்டு தனிப்பட்ட விவசாயிகள் தண்ணீரை களவாடுவதற்கும்,  விவசாயிகள் எதிர்பால் கிடப்பில் கிடந்த சரபங்கா மேட்டூர் திட்டத்தை சொந்த சுய அரசியல் லாபத்திற்காக அந்த மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அமல்படுத்துவதை இந்த கூட்டத்தின் மூலம் கண்டிக்கிறோம். 

 

 இந்த திட்டம் அமலாக்கப்பட்டால் சேலத்திற்கும் காவிரி டெல்டாவிற்கும் மீண்டும் ஒரு டிரிப்யூனல் அமைக்கப்பட வேண்டி வரலாம். கர்நாடக அரசு காவிரி ஒப்பந்தத்திற்கு மாறாது என காவிரி ஆணையத்திடம் முறையிட்டால் கிடைக்கிற தண்ணீர் கூட கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இதனை தனிப்பட்ட முறையில் விருப்பத்தின் அடிப்படையில் செயலபடுத்தி வருகிற  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வன்மையாக கண்டிக்கிறது. 28 ம்தேதி திருவாரூரில்  நடைபெறவுள்ள ஆய்வு கூட்டத்தில் இந்த திட்டத்தை கைவிட படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லை என்றால் பரவலாகவே போராட்டம் வெடிக்கும்.

 

காவிரி உபரிநீர் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட விவசாய முக்கிய பிரச்சனைகளை வலியுறுத்துவோம் என்கிற காரணத்தினால் தான் அங்கீரிக்கப்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கங்களை போன்ற சில அமைப்புகளை முதல்வர் சந்திக்க மறுத்து, தவிர்த்து காவிரி காப்பாளன் விருது கொடுத்த சங்கங்களை மட்டும் அழைத்துள்ளது. இதனை  வன்மையாக  கண்டிக்கிறோம். தமிழக முதல்வரை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் 8ம் தேதி ஒன்றிய நகரங்களில் கருப்புக்கொடி காட்டி கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்," என தெரிவித்தார். 

 

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்துகிறார். இந்த நேரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்