Skip to main content

திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர்கள்?– கோடிகளில் பட்ஜெட் போட்டுள்ள கட்சிகள்

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

 

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி திமுகவுக்கு சாதகமான தொகுதி என பெயர் பெற்றது. 1951 முதல் இப்போது வரை இந்த தொகுதியில் பலமுறை திமுகவே வெற்றி பெற்றுள்ளது. அதனால் இந்த தொகுதியில் சீட் பெற கடுமையாக திமுக தரப்பில் முயற்சிக்கிறது.

 

t

 

திமுக கூட்டணி:

இந்த தொகுதியில் திமுகவே நிற்க முடிவு செய்துள்ளது. சீட் கேட்பாளர்கள் மனு செய்யலாம் என அறிவிப்பு செய்ததன் விளைவாக கடந்த முறை நின்று தோல்வியை சந்தித்த மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, திருவண்ணாமலை நகராட்சி முன்னால் சேர்மன் ஸ்ரீதரன், திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன் மூவரும் பணம் கட்டிவிட்டு பெரும் முயற்சியில் உள்ளனர்.

 

k

 

கட்சி நிர்வாகிகள் சிலர், மா.செவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏவின் மகன் மருத்துவர் கம்பனுக்கு சீட் தந்தால் பெரிய அளவில் வெற்றி பெற்றுவிடலாம் என நம்புவதால் அவருக்காக வேலுவிடம் பேசியுள்ளனர். அவரோ, ஊராட்சி செயலாளர்கள் கூட்டத்திலேயே, நான் என் மகனுக்கு கேட்கவில்லை எனக்கூறிவிட்டார். இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருந்தும் அவர் பெயரில் சிலர் மனு செய்துள்ளனர்.

 

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இந்த தொகுதி மீது ஆர்வம் காட்டவில்லை. இதனால் அந்த கட்சி நிர்வாகிகள் பெரியதாக ஆர்வம் காட்டவில்லை.

 

அதிமுக கூட்டணி:

அதிமுகவே நேரடியாக இந்த முறை போட்டியிட நினைக்கிறது. முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, கொங்கு பகுதி ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்கள் மூலமாக தனக்கு சீட் கேட்டு முதல்வர் எடப்பாடியை நெருக்கிவருகிறார். கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மூலமாக முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் தனக்கு தேவை எனக்கேட்டு வருகிறார். சிட்டிங் எம்.பி வனரோஜா, முன்னால் மா.செ. ராஜன் போன்றோரும் சீட் வாங்கிவிட முட்டி மோதுகின்றனர்.

 

a

 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாமக, அந்த கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்படும் தேமுதிக போன்றவை ஆர்வம் கட்டவில்லை. அதனால் திமுக – அதிமுக நேரடி போட்டி என்பது இப்போது வரை உறுதியாகியுள்ளது. வேட்பாளர்கள் யார் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும் என்கிறார்கள் இரண்டு கட்சி உறுப்பினர்களும்.

 

கோடிகளில் பட்ஜெட்:

அதிமுகவில் ஒரு தொகுதிக்கு 40 கோடி என தற்போது பட்ஜெட் போடப்பட்டுள்ளது. ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் தரவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெ பாணியிலேயே, நிறுத்தப்படும் வேட்பாளருக்கு தலைமையே முழுவதும் செலவு செய்ய முடிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, வலிமையான, கட்சிக்கு விசுவாசமான வேட்பாளராகவும் தேடுகிறது. இதனால் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன் இடையே போட்டி அதிகமாகியுள்ளது. 

 

a

திமுகவில் ஒரு தொகுதிக்கு 30 கோடி என பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 15 கோடி வேட்பாளராக அறிவிக்கப்படுபவர் செலவு செய்ய வேண்டும், மீதி 15 கோடியை தலைமை தரும். திமுகவில் வேட்பாளராக உள்ள அண்ணாதுரை என்னிடம், 5 கோடி தான் உள்ளது, மீதியை கட்டி என்னை ஜெயிக்க வைங்க உங்களுக்கு விசுவாசமா இருப்பன் என வேலுவிடம்  கூறியுள்ளதாக கூறப்படுகிறது. திருப்பத்தூர் ந.செ ராஜேந்திரன், என்னால் 10 முடியும் என்றுள்ளார். 

 

இதுதான் தற்போது திமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு விசுவாசமா இருந்தால் போதுமா, கட்சிக்கு விசுவாசமா இருக்கற ஆளை தேர்வு செய்து வேட்பாளரா நிறுத்தலையா என கேள்வி எழுந்து திமுகவினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.