Skip to main content

நம்ம வேட்பாளர் ரொம்ப அப்ராணி... பால் வழியும் முகம்... ஓ.பன்னீர்செல்வம் பேச்சு...

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

 

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் முனியாண்டி போட்டியிடுகிறார். இதனையொட்டி அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம், அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் துணை முதல் அமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். 

 

thiruparankundram by election 2019 o panneerselvam admk


அப்போது அவர், ''ஒரு பக்கம் துரோகி, மறுபக்கம் எதிரி. இரண்டையும் நாம் தேர்தல் களத்தில் சந்தித்து வெற்றி பெற வேண்டிய சூழலில் இருக்கிறோம். எப்படி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் நாம் பணியாற்றினோமோ, அதேபோல் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரை நினைவில் வைத்து பணியாற்ற வேண்டும். 

 

ஏனென்றால் நாம் ஒரு தொண்டரைத்தான் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். தொண்டராக இந்த இயக்கத்தில் இணைந்து இயக்கத்துக்காக உழைத்த தொண்டர். ரொம்ப அப்ராணி. பார்த்தால் சாதுவாக தெரிகிறது. பால் வழியும் முகம். பகுதி கழக செயலாளராக இருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து செயலாற்றி வந்திருக்கிறார்.

 

பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தெந்த பகுதியில் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா கூறுவார். அதனை ஏற்று பணியாற்ற வேண்டும். ஏற்கனவே பல்வேறு இடைத்தேர்தல்களை சந்தித்து வெற்றிகளை பெற்றிருக்கிறோம். அதேபோல இந்த தேர்தலிலும் அனைத்து பொறுப்பாளர்களும் அந்தெந்த பகுதியில் தங்கியிருந்து பணியாற்றி வெற்றிபெற உழைக்க வேண்டும்'' என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.