Skip to main content

ஆனால் இதுபற்றி ஸ்டாலின் வாய்திறக்க மாட்டார்... எனினும் தேர்தல் முடிந்த பிறகு... எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

 

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து நாகமலை புதுக்கோட்டை, வடபழஞ்சி, தனக்கன்குளம் ஆகிய இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 

 

edappadi palanisamy



அப்போது, இதுவரை எந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வாவது என்னை சந்தித்து தொகுதி பிரச்சினை குறித்து ஏதாவது கோரிக்கை வைத்தார்களா? இல்லவே இல்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் இந்த திட்டத்தை கொண்டுவருவேன், அந்த திட்டத்தை செயல்படுத்துவேன்’ என வாக்குறுதி அளிக்கிறார். இவர் எதிர்க்கட்சி தலைவராகத்தான் இருக்கிறார். இவரால் எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்? என்று சிந்தித்து பார்க்கவேண்டும்.
 

நான் சாதாரண தொண்டனாக வந்து உங்களிடம் வாக்குகளை கேட்கிறேன். தலைவராக வரவில்லை. ஆனால் மு.க.ஸ்டாலின் தலைவராக வந்து வாக்கு கேட்கிறார். மக்களாகிய நீங்கள் இடுகின்ற கட்டளையை நிறைவேற்றித்தருவதை எனது கடமையாக கருதி நான் பணியாற்றி வருகிறேன்.

 

கேபிள் டி.வி. கட்டணத்தை குறைப்பதாக மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். கலைஞர் மற்றும் தயாநிதி மாறன் குடும்பத்துக்கு மட்டும் 40 டி.வி. சேனல்கள் உள்ளது. இதில் சன் டி.வி குழுமத்தில் உள்ள சேனல்களை பார்க்க ரூ.56 கட்டணம் ஆகிறது. கேபிள் டி.வி. கட்டணத்தை குறைப்பதாக சொல்லும் மு.க.ஸ்டாலின், இந்த சேனல்களின் கட்டணத்தை தள்ளுபடி செய்யலாமே. ஆனால் இதுபற்றி அவர் வாய்திறக்க மாட்டார். எனினும் தேர்தல் முடிந்த பிறகு கேபிள் டி.வி. கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
 

‘இந்த அரசை கவிழ்ப்பேன்’ என டி.டி.வி.தினகரன் பேசி வருகிறார். அவருக்கு அரசியல் அறிமுகம் வழங்கியதே அ.தி.மு.க. தான். தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க. வுக்கும் ரகசிய உறவு உள்ளது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
 

அ.தி.மு.க ஓட்டுகளை அ.ம.மு.க. பிரிக்கும்போது தி.மு.க. வெற்றிபெறும் என்பது அவர்களது எண்ணம். அந்த எண்ணம் ஒருபோதும் மக்களிடம் எடுபடாது. வெளியில் எதிரிகள் போன்று தினகரனும், மு.க.ஸ்டாலினும் தாக்கி பேசுவதுபோல் பேசிக்கொள்கிறார்கள். உள்ளூர ரகசிய உறவு வைத்துக்கொள்கிறார்கள். 

 

டி.டி.வி.தினகரன் 10 ஆண்டுகாலம் அ.தி.மு.க. கட்சியிலேயே இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகுதான், இவர் கட்சிக்குள்ளேயே வருகிறார். இவர் கட்சியையும், ஆட்சியையும் அபகரிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளில் முயற்சி செய்தார். தி.மு.க.வுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். அத்தனை சதித்திட்டங்களும் உங்கள் பேராதரவோடு முறியடிக்கப்பட்டுள்ளது. மறைமுகமாக தி.மு.க.வை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகவும், அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இவ்வாறு பேசினார்.

 

சார்ந்த செய்திகள்