Skip to main content

தலைவர்களை ஒரே மேடையில் ஒருங்கிணைத்த திருமாவளவன்!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
Thirumavalavan united the leaders on one platform!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாட்டில் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்றனர். இதற்காகத் திருச்சியில் பிரம்மாண்ட மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டது.

திருச்சி சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு நேற்று (26ம் தேதி) நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பாஜகவிற்கு எதிரான இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 28 கட்சித் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றியது முக்கியத்துவம் பெற்றது.

Thirumavalavan united the leaders on one platform!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வாழ்த்துரையை திருச்சி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு படித்தார். திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் திபங்கர் பட்டாச்சார்யா, மாநில கட்சியின் தலைவர்களான வைகோ, காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், ஈஸ்வரன் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

Thirumavalavan united the leaders on one platform!

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பாஜக மற்றும் இந்தியா கூட்டணியினர் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு மற்றும் பரப்புரை பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இந்த மாநாட்டின் மூலம் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளை ஒரே மேடையில் ஒருங்கிணைக்கும் முக்கிய பணியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் முன்னெடுத்துள்ளார். 

மாநாடு ஏற்பாடுகள் 

இந்த மாநாட்டிற்காக சிறுகனூரில் 50 ஏக்கர் பரப்பளவில் 1000 அடி நீளம் - 500 அடி அகலத்தில் திடல் அமைக்கப்பட்டது. மாநாட்டின் பிரதான நுழைவு வாயில் பழைய நாடாளுமன்ற வடிவிலும், பக்க வாயில்கள் அம்பேத்கரின் நினைவிடத்தின் வடிவிலும் அமைக்கப்பட்டது. நுழைவுப் பகுதியில் மாபெரும் புத்தக வடிவில் இந்திய அரசமைப்பின் முகவுரையும், அம்பேத்கரின் முழுவுருவச் சிலையும் வடிவமைக்கப்பட்டது. இந்த சிலை மற்றும் புத்தகத்தினை விசிக தொண்டர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் விழா மேடை புதிய நாடாளுமன்றக் கட்டட வடிவில் 80 அடி அகலத்தில் அமைக்கப்பட்டது. மேடையின் இரு பக்கத்திலும் எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டு, தலைவர்கள் பேச வரும் முன்பு அவர்கள் பேச்சுகள் அந்த பிரம்மாண்ட திரையில் ஒளிபரப்பப்பட்டது. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி, சின்னங்கள் வண்ணமயமாக ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்ச்சி நிரல்

இந்த மாநாட்டில் பாடகர் அறிவு குழுவினரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டுத் திடலின் வலதுபுறத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக மேடையில் இசை நிகழ்ச்சி நடந்தது. இது தவிர பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நடந்தன.

உறுப்பினர் சேர்க்கை இணைய தளம் 

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இணைய தளத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்தேக இணையதளம் வெளியிடப்பட்டது. இதனை தொல். திருமாவளவனுடன் இணைந்து விசிக தேர்தல் ஆலோசகரும் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனரும், இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவருமான ஆதவ் அர்ஜுனா வெளியிட்டார். மேலும் விசிக இணைய வழியில் ஆதவ் அர்ஜுனா, முதல் உறுப்பினராக தன்னை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார்.  

Thirumavalavan united the leaders on one platform!

இந்த மாபெரும் மாநாட்டிற்கான திட்டமிடல், வடிவமைப்பு, ஒருங்கிணைப்பு பணிகளை voice of commons தேர்தல் வியூக வல்லுநர்கள் மேற்பார்வையில் நடந்தது. வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் குழுவினர் கடந்த ஒரு வருடமாக விசிக கட்சி சீரமைப்பு, நிர்வாகிகள் நியமனம், திருமாவளவன் பிறந்தநாள் மணி விழா நிறைவு விழா, வடமண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி வகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்