Advertisment

“சங்பரிவார் கும்பல் காலடி வைத்ததிலிருந்தே மணிப்பூர் பற்றியெரிகிறது” - திருமாவளவன் எம்.பி

thirumavalavan talk about manipur and bjp

சங்பரிவார் கும்பல்கள் மணிப்பூரில் காலடி வைத்ததில் இருந்து மணிப்பூர் பற்றி எரிகிறது. மேட்டி என்ற இன மக்கள் தற்போது பத்தாயிரத்திற்கு அதிகமானோர் அண்டை மாநிலங்களில் தஞ்சம் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தையும் பிரதமர் மோடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என திருமாவளவன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

திருவாரூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் இன்று திறந்து வைக்க உள்ள கலைஞர் கோட்டத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த எம்.பி திருமாவளவன், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், “வருகின்ற 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் பாஜக அரசு எதிர்ப்பு கட்சித் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. நடைபெற உள்ள 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுப்பதற்கும் எதிர்க்கட்சிகள் சிதறிப் போகாமல் ஒருங்கிணைக்கப்படுவதற்கும் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக முதல்வர் பங்கேற்க உள்ள நிலையில் அவர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க எடுக்கும் முயற்சிகளைத்தடுக்கும் விதமாக பாஜகவின் மோடி அரசு தொடர்ந்து பல்வேறு சதித்திட்டங்களை வகுக்கிறது.

Advertisment

அதன் விளைவாகத்தான் அமலாக்கத்துறையை ஏவி விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவரை கைது செய்துள்ளனர். சட்டப்படியான நடவடிக்கை என்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டேபாஜகவின் ஆட்சியாளர்கள் தொடர்ந்து பல்வேறு அடக்குமுறைகளைச் செய்து வருகிறார்கள். எனவே இப்படிப்பட்ட எல்லா அடக்குமுறைகளையும் தாண்டி தமிழக முதல்வர் தற்போது இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் செயல்படுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்.

மணிப்பூரில் பாஜக உள்ளிட்ட சங்பரிவார் கும்பல்களால் பழங்குடியின மக்களுக்கு இடையே இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாட்டை உருவாக்கி அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி இன்று பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக மற்றொரு இடத்திற்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பலர் மிசோரம் போன்ற அண்டை மாநிலங்களில் தஞ்சம் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சங்பரிவார் கும்பல்கள் மணிப்பூரில் காலடி வைத்ததில் இருந்து மணிப்பூர் பற்றி எரிகிறது. மேட்டி என்ற இன மக்கள் தற்போது பத்தாயிரத்திற்கு அதிகமானோர் அண்டை மாநிலங்களில் தஞ்சம் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் பிரதமர் மோடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். யோகா செய்யுங்கள் என்று அறிவுரை கூறி வருகிறார். நாட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அணுகுமுறை என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.பிரதமர் மோடியின் இந்த போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ள பாஜக எதிர்ப்பு அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து கட்டாயம் விவாதிக்க வேண்டும். ஒரு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச்சிறுத்தைகள் முன்வைக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவரை ஆந்திர மாநில காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றபோது எதற்காக கைது செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதால் அவருடைய குடும்பத்தாரையும் சேர்த்து கைது செய்து பல சித்ரவதைகளை தந்து கடந்த ஒரு வார காலமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளனர். குறிப்பாக பெண்கள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சொல்ல முடியாத பல இன்னல்களை அவர்கள் அடைந்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்கள் தலையிட்டு தற்போது அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் இருவர் மீட்கப்படாத நிலையில் அவர்களும் மீட்கப்பட வேண்டும். தமிழக அரசு இதில் தலையிட்டு உடனடியாக பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களுக்கான நீதியை வழங்கிட முன்வர வேண்டும். மேலும் அவர்களுக்கான சட்ட ஆலோசனைகளைக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும். மேலும், இந்த வன்கொடுமையில் ஈடுபட்ட சித்தூர் காவல் நிலைய அதிகாரிகளை கண்டித்து வருகின்ற 26 ஆம் தேதி ஆந்திர மாநில சித்தூர் விசிகசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என்றார்.

எஸ்.வி.சேகர் பிராமணர்களுக்கு என்று ஒரு தனியான கட்சி ஆரம்பிக்க உள்ளதாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தவர், “அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்” எனக்கூறினார். “அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜக விலகினால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா” என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், “முதலில் பாஜக விலகட்டும். பிறகு பார்ப்போம்”என்றார்.

தொடர்ந்து அரசு மதுபானங்களால் உயிரிழப்பு ஏற்படுவதாக எழுப்பிய கேள்விக்கு, “இந்த உயிரிழப்புகளுக்கு மது பாட்டில்களில் கலந்துள்ள மெத்தனால் தான் காரணம் என்று கூறப்படுகிறது.சமீபத்தில் திருச்சியில் உயிரிழந்தவர்களுடைய உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாலும்அவர்கள் அளவுக்கு அதிகமாக குடித்ததாலும்இந்த இறப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த உயிரிழப்புகளை தடுப்பதற்கு அரசு மிகக் கவனமுடன் செயல்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

kalaignar manipur Thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe