thirumavalavan speech at vck rally

‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து 2.8 கி.மீ தூரத்திற்கு இன்று (14-06-25) பேரணி நடைபெற்றது.

Advertisment

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிப்பதை கைவிட வேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற தலைமையில் திருச்சியில் விசிக சார்பில் பேரணி நடைபெற்றது. திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “யார் எந்த கூட்டணி என்று தேர்தல் கணக்குகளை பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நமக்கு அந்த கவலை இல்லை. விசிக திமுகவிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது என்று சொல்கிறார்கள். அட அற்பர்களே, அரசியல் அறியாமையில் உளறும் அரைவேற்காடுகளே, தமிழ்நாட்டு அரசியலை திசை வழியை தீர்மானிப்பவர்கள் விசிக தான். இந்திய அரசியலையும் கூர்மைப்படுத்துபவர்களும் விசிக தான். மதச்சார்பின்மைக்கு ஆதரவானவர்கள், எதிரானவர்கள் என்று கூர்மைப்படுத்துகிற அரசியலை விசிக மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறது. இதன் வலிமையை தெரியாதவர்கள், திருமாவளவனுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை, பேரம் பேச தெரியவில்லை, துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்க மறுக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். நாங்கள் முதல்வர் பதவிக்கே ஆசைப்படவில்லை. எங்கள் தந்தை அம்பேத்கர், பிரதமர் பதவியை கைப்பற்றுங்கள் தான் என்று வழிகாட்டிருக்கிறார். அது தான் அதிகாரமுள்ள பதவி. இந்த மண்ணின் பூர்வக்குடிகள் ஆட்சி அதிகாரத்தில் வர வேண்டும்.

எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும், எனக்கு தெரியும், விசிகவுக்கு தெரியும். யூடியூப்பில் யாரெல்லாமோஎனக்கு அறிவுரை வழங்குகிறார்கள். 35 ஆண்டுகளாக நாங்களும் அரசியல் செய்து கொண்டு தான் இருக்கிறோம், 10 ஆண்டுகாலமாக தேர்தல் அரசியல் வேண்டாம் என்று கூறியவர்கள் நாங்கள். சமகாலத்தில் எங்களோடு புறப்பட்டு வந்தவர்கள் எங்கோ வழிதவறி போய்விட்டார்கள். ஆனால், இன்றைக்கு விசிக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக இருந்திருக்கிறது. கேரளாவிலும், மகாராஷ்டிராவிலும், கர்நாடகாவிலும் துளிர்விட்டு கொண்டிருக்கிறது. விசிக இன்றைக்கு அனைத்து வரம்புகளை கடந்து நிமிர்ந்து நிற்கிறது. எங்களுக்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை. நாம் பட்டியல் சமூக மக்களை ஏமாற்றுகிறோம் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்ன சொல்வது?. இன்றைக்கு பட்டியல் சமூக மக்கள் சமூக தளத்திலும் பொருளாதார தளத்திலும், கலையுலகத்திலும் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்றால், விசிகவின் எழுச்சி தான் அதற்கு காரணம்.

Advertisment

எங்களை கூமுட்டைகள் என்று எண்ணாதீர்கள், கண்ணில் விரலை விட்டு துலாவுவோம். ஆண்ட பரம்பரை, வீர பரம்பரை என்று சொல்லக்கூடியவர்கள் நாங்கள் இல்லை. நாங்கள் அறிவு பரம்பரை. எங்களை நோக்கி அதிகாரம் வரும், எங்களை நோக்கி நாற்காலிகள் வரும். திடீரென்று பா.ஜ.கவுக்கு முருகன் மேல் பக்தி வந்துள்ளது. உ.பி போனால் ராமர் பக்தர், பீகார் போனால் கிருஷ்ணர் பக்தர், மகாராஷ்டிரா போனால் விநாயகர் பக்தர், மேற்கு வங்கம் போனால் காளி பக்தர், தமிழ்நாட்டுக்கு வந்தால் முருக பக்தர். பா.ஜ.கவினர் எத்தனை வேஷம் போடுகிறார்கள் என்று பாருங்கள். இது தான் சனாதன புத்தி. இந்த மக்களை மயக்க பார்க்கிறார்கள்” என்று ஆவேசமாகப் பேசினார்.