Advertisment

“பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” - தொல்.திருமாவளவன் எம்.பி

Thirumavalavan speech about aadhav arjuna issue

மதுவிலக்கு மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தயாராகி வரும் நிலையில் அண்மையில் விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார். அதில் திமுகவுடனான கூட்டணி குறித்து கருத்துகளைத் தெரிவிக்கையில், “விசிக கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் திமுக வெல்ல முடியாது. குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். தமிழக அமைச்சரவையில் விசிக, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகளுக்கும் இடம் அளிக்க வேண்டும்” எனப் பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார். இந்த கருத்துகள் திமுக - விசிக இடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆதவ் அர்ஜுனின் இந்த கருத்துக்கு, விசிக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு எதிர்கருத்து தெரிவித்து கண்டனம் தெரிவித்தனர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் போராளி திலீபன் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ஆதவ் அர்ஜூன் ஒரு கருத்தைச் சொல்ல, கட்சியின் பொதுச் செயலாளர்கள் ஒரு கருத்தைச் சொல்ல, கட்சிக்குள் குழப்பம், முரண்பாடுகள் இருக்கிறது என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். ஆதவ் அர்ஜுன் கட்சி நலன் சார்ந்து சிந்தித்தார். பொதுச் செயலாளர்கள், கட்சியின் நலனும் முக்கியம் அதைவிட இன்றைக்கு நாம் பயணித்துக் கொண்டிருக்கின்ற கூட்டணி நலனும் முக்கியம் என்று சிந்தித்துப்பேசினர். கூட்டணி முறிந்து போனால், அடுத்து என்ன என்கிற பெரிய கேள்விக்குறி நிற்கிறது. நாம் ஒரு சேஃபர் ஷோனில் நிற்காமல் எந்த யுத்தத்தையும் நடத்தக்கூடாது. சேஃபர் ஷோன் இல்லாமல் நாம் விளையாடவேக் கூடாது.

Advertisment

நம்முடைய முன் பக்கத்தில் எதிரிகளை நிற்க வைத்து தான், நாம் யுத்தம் செய்ய வேண்டும். நம்மை சுற்றி எதிரிகளை உருவாக்கிவிடக் கூடாது. நமது எதிரி எதிரே தான் இருக்க வேண்டும். நம்மை சுற்றி இருக்கக் கூடாது. நாம் உணர்ச்சிவயப் படக்கூடாது. நம்மை எல்லோரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். கருத்தியல் அடிப்படையில், விவாதிக்கக் கூடிய அளவிற்கு வலிமை பெற்ற தலைவர்களைக் கொண்ட இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் என்று என்னால் அடித்துச் சொல்லமுடியும். தேர்தல் வியூங்களை வகுத்து செயல்படக் கூடிய வலிமைபெற்ற இயக்கம் வி.சி.க. சராசரியாக இதை ஒரு சாதி கட்சி தானே என்று நினைக்கிறார்கள். ஆனால், பரிமான மாற்றத்தை நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டு இருக்கிறோம்.

30 ஆண்டுகளாக எங்கள் மீது குத்தப்பட்டிருந்த சாதிய முத்திரையை துடைத்தெறிவதற்கான பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் நாங்கள் கடைபிடித்து அங்குல அங்குலமாக அடியெடுத்து வைக்கிறோம். கூட்டணி நலன்களுக்கு முன்னுரிமையை கொடுக்க ஒரு நிலைப்பாடு, கட்சியின் நலன்களுக்கு முன்னுரிமையை கொடுக்க இன்னொரு நிலைப்பாடு. ஒருவரையொருவர் குறைத்து மதிப்பிடுகிற அணுகுமுறைகளுக்கு செவி சாய்க்கக் கூடாது. எனக்கு கட்சி நலனும் முக்கியம், கூட்டணி நலனும் முக்கியம் எல்லாவற்றையும் விட மக்கள் நலன் முக்கியம். அவசரப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. உங்களுக்கு ஒரு மணி நேரத்திற்குள்ளே விடை தெரிய வேண்டும் ஆனால், எனக்கு அப்படி ஒன்றும் அவசரம் இல்லை. யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் நாங்கள் பேசிக்கொள்வோம். அர்ஜுனோடு பேச வேண்டுமென்று என்றாலோ அல்லது ரவிக்குமாரோடு பேச வேண்டுமென்று என்றாலோ அவர்களிடம் நான் பேசிக்கொள்வேன். டிவியில் அமர்ந்துகொண்டு, திருமாவளவன் இதைப்பற்றி ஏன் எதுவும் சொல்லவில்லை என்று கேட்கிறார்கள். உங்களிடம் நான் ஏன் சொல்ல வேண்டும்?. பொதுவெளியில் சொல்ல வேண்டிய தேவை என்ன இருக்கிறது? நாம் நிதானமாக அடியெடுத்து வைக்க வேண்டிய தேவை இருக்கிறது” என்று பேசினார்.

vck Thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe