
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்வின் போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அரிவாள் வெட்டு சம்பவம் ஏற்பட்டு இரு தரப்பிலும் சுமார் 17 பேர்கள் காயமடைந்தனர். இந்த மோதலில், ஒரு வீடு, 3 பைக்குள் எரிக்கப்பட்டது. மேலும் 4 பைக்கள், கார்கள், ஒரு அரசு பஸ் கண்ணாடி, நெடுஞ்சாலை ரோந்து ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இந்த மோதல் சம்பவத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வீடு எரிக்கப்பட்டதால் 14 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் தாக்கப்பட்ட வழக்கில் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 14 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து, வடகாடு பகுதியில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா நேற்று இரவு முதலே அங்கு தங்கி கண்காணிப்பு பணிகளை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மேலும், 300க்கும் மேற்பட்ட போலீசார், வடகாடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதி முழுவதும் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்தியன் பெட்ரோல் பங்க்கில் யார் முதலில் பெட்ரோல் போடுவது என்று, மாற்று சமூகத்தைச் சோந்த நபர்களுக்கும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தகராறில் தான் மோதல் சம்பவம் நடந்துள்ளது என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “வடகாட்டில் சாதிய வன்முறையில் பாதிக்கப்பட்ட பட்டியலின சமூகத்தினர் மீதே வழக்குப்பதிவு செய்ய காவல்துறை முயற்சித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை, பாதிக்கப்பட்டவர்களாக மட்டுமே கையாண்டால் தான் நீதியைப் பெற முடியும். பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் வகையில் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த சிலர், தேர் வடத்தை தொட்ட போது அங்கே வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். சாதியைச் சொல்லி இழிவுப்படுத்திருக்கிறார்கள். அதனை தொடர்ந்து தான், ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தாக்குதலை நடத்திருக்கிறார்கள். இந்த சூழலில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை, வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. புலனாய்வு நடைபெறுவதற்கு முன்பே, காவல்துறை ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. எனவே, சாதிய வன்முறையில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு பின்னணியில் உள்ள அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.