Skip to main content

“பின்னடைவு வந்தாலும் சரி பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் இருக்கமாட்டோம்” - திருமாவளவன் 

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

Thirumavalavan said vck will not be interested coalition BJP pmk elections

 

தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கவும் பாஜக முயன்று வருவதாகக் கூறி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது கண்டனங்களை எழுப்பினர். 

 

இந்தக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன் எம்.பி, “தமிழ்நாட்டில் பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்பட்டு, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எதிரான நிலையை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் பாஜக தலைவர்களின் பேச்சுகள் வன்முறையைத் தூண்டும் வகையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் காவல்துறை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். திமுக ஆட்சியில் கி.வீரமணியின் காரை சூழ்ந்து அச்சுறுத்துகின்றனர். இதனையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் காவல்துறை பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் கூட எழுகிறது. அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும் பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம். மேலும் இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு பலம் வாய்ந்த அணியை திமுக ஒருங்கிணைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.