“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத்தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா,பெரியார், அம்பேத்கர்,காமராஜர் ஆகியோர் சிலைகளுக்குவிசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத்தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில்சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன்.உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில்தான் உள்ளேன்.தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.

Thirumavalavan vck
இதையும் படியுங்கள்
Subscribe