Thirumavalavan MP order for manjakollai issue

கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லை விவகாரத்தில் வி.சி.க. நிர்வாகிகள் 2 பேர் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடலூர் மாவட்டம், புவனகிரி அருகேயுள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தில் வி.சி.க. கொடி மற்றும் கொடிக் கம்பத்தை அறுத்தெறிந்து, தொடர்ந்து இரு மாதங்களாகச் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்திவந்த சாதிவெறி சக்திகள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரைக் கண்டித்து கடந்த 04.11.2024 அன்று புவனகிரியில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் வ.க. செல்லப்பன் மற்றும் மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநிலத் துணை செயலாளர் செல்விமுருகன் ஆகியோர் காவல்துறையைக் கண்டிக்கும் ஆவேசத்தில் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் உரையாற்றியுள்ளனர். ஆகஸ்ட் 23 அன்று கட்சியின் கொடியை அறுத்தவர்கள், அக்டோபர் 15 அன்று கொடிக் கம்பத்தை அடியோடு அறுத்தவர்கள் ஆகியோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர்களிருவரும் தமது பேச்சில் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், அப்பாவி வன்னியர் சமூக மக்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பா.ம.க. மாவட்ட செயலாளர், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் மற்றும் வி.சி.க. கொடிக்கம்பத்தின் பீடத்தை இடிக்க முயற்சித்த பெண் ஆகிய தனிநபர்களுக்கு எதிராகவும் பேசியுள்ளனர்.

Advertisment

அதே வேளையில், அவர்கள் இருவரின் பேச்சுகளும் இரு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, வ.க. செல்லப்பன் மற்றும் செல்வி முருகன் ஆகிய இருவரும் மூன்று மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். நடவடிக்கை எடுக்கப்படும் இந்நாளிலிருந்து பதினைந்து நாள்களில் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன்னர், இது குறித்த விசாரணையில் இருவரும் உரிய விளக்கமளிக்க வேண்டுமென அறிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.