Skip to main content

“திமுகவுடன் கூட்டணி தொடருமா?” - தொல். திருமாவளவன் எம்.பி. பேட்டி!

Published on 15/09/2024 | Edited on 15/09/2024
 Thirumavalavan MP answer about Will the alliance with DMK continue

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மது ஒழிப்பில் மத்திய, மாநில அரசுகளுக்குத் தான் பொறுப்பு உள்ளது என்பது போல ஒரு பார்வை இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 47 அதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. இது தொடர்பாக இரண்டாவது ஐந்தாண்டுக் காலத்திலும், மூன்றாவது ஐந்தாண்டுக் காலத்திலும் விரிவாகக் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலே பேசப்பட்டிருக்கிறது. ஸ்ரீமன் நாராயணன் தலைமையில் ஒரு குழுவை அமைக்கப்பட்டது. அந்த குழு ஏராளமான பரிந்துரைகளையும் தந்திருக்கிறது. அந்த குழு பரிந்துரையில் மிக முக்கியமானது மதுவிலக்கு தொடர்பான சட்டம் இயற்ற வேண்டும் என்பதும். கடந்த 1958ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்குள்ளாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறது.

ஏன் நாம் அனைவரும் சேர்ந்து குரல் எழுப்பக் கூடாது?. இது ஏன் விடுதலை சிறுத்தைகளின் மாநாடாகப் பார்க்க வேண்டும்?. மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுக்கிறது. அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம். இது ஒரு சமூகப் பிரச்சினை உள்ள ஒவ்வொருவராலும் உணர்ந்து கொள்ள முடியும். வெறும் அரசியல் கணக்குகள் போட்டுப் பார்ப்பது இந்த பிரச்சனையின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிடுவதாக இருக்கிறது. ஆகவேதான் நான் மறுபடியும் சொல்லுகிறேன் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுப்போம். எனவே தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுக்கடைகளை மூட வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது.

 Thirumavalavan MP answer about Will the alliance with DMK continue

போதையில்லா ஒரு தேசத்தை உருவாக்க முயற்சிப்போம். போதைப்பொருள் கடத்துவதில்  மாபியா கும்பல் தேசிய அளவில் தீவிரமாக வேலை செய்து வருகிறது. அயல்நாடுகளில் இருந்து போதைப்பொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டிலேயே மாநிலம் விட்டு மாநிலம் போதைப் பொருள் கடத்தப்படுகிறது. ஏழை,எளிய மக்கள் விளிம்பு நிலை மக்கள் பரவலாக வசிக்கக் கூடிய இடத்தில் இன்றைக்குக் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கத்தில் உள்ளது. இவையெல்லாம் தேசத்தின் மனித வளத்தைப் பாழாக்குகிறது. ஒட்டு மொத்தத்தில் இது ஒரு நேஷனல் லாஸ் தேச அளவில் நமக்கான மனித வள இழப்பு ஏற்படுகிறது. எனவே தயவு கூர்ந்து இந்த கோணத்தில் இந்த பிரச்சினையைப் பாருங்கள் .வெறும் அரசியல் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பிரச்சனையின் தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்துவிட வேண்டாம் என்று அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுகிறேன்.” எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ‘போதை ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி’ என்ற அன்புமணியின் விமர்சனத்திற்குப் பதில் அளித்த அவர், “சமூக பொறுப்புணர்வு இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும்” என்று கூறினார். மேலும் அவர் கூறும்பொழுது, “ சமூக வலைத்தளத்தில் எனது பதிவுகள் அழிக்கப்பட்டதாக எனக்குத் தகவல் தெரிந்த பிறகு  முறையாகப் பதிவு செய்யுமாறு எனது அட்மினுக்கு அறிவுறுத்தியுள்ளேன். நான் அனைத்து நேரங்களிலும் பதிவு போட இயலாது. நான் தலைமை பொறுப்பேற்ற பிறகு பத்தாண்டுக் காலம் தேர்தலைப் புறக்கணித்து உள்ளோம்.

 Thirumavalavan MP answer about Will the alliance with DMK continue

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தைத் தொடர்ச்சியாகவே சொல்லி வருகிறோம். இதனை மறைமலைநகர் செயற்குழு கூட்டத்திலும் மேற்கோள் காட்டி பேசினேன். கூட்டணியில் இருந்து கொண்டே மக்களின் பிரச்சனைக்காகக் கூட்டணியின் எதிரணியோடு இணைந்து பணியாற்றி இருக்கிறோம். கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன கொலை நடந்த நேரத்தில் ஆளுங்கட்சி திமுக கூட்டணியில் இருந்தாலும் கூட நாங்கள் எதிர்க்கட்சி கூட்டணிகளோடு இணைந்து பயணித்திருக்கிறோம். தேர்தல் நிலைப்பாடு வேறு மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடுவது வேறு என்பதை அந்த மண்டல செயற்குழுக் கூட்டத்தை நான் விளக்கிப் பேசிய ஒரு வீடியோ தான் அது. பழைய வீடியோ அல்ல புதிய வீடியோ தான் அது. இதில் அரசியல் நோக்கம் இல்லை.

மது ஒழிப்பு  மாநாட்டில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. 1977ஆம் ஆண்டு முதல் மத்தியில் கூட்டாட்சியே நிலவி வருகிறது. பாஜக தனிப் பெரும்பான்மையுடன் இருந்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகார பகிர்வு அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அவ்வாறு நடப்பதும் தவறல்ல. அந்த கோரிக்கையை நாங்கள் எழுப்புவதிலும் தவறில்லை. இந்த கருத்தை வலியுறுத்தி தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு ஒரு கருத்தரங்கமே விசிக நடத்தியுள்ளது. அதில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி ஒரு புத்தகமும் வெளியிட்டுள்ளோம். இதனால் யாரையும் மிரட்டுவது என்பது அர்த்தமல்ல. அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது தான் உண்மையான ஜனநாயகம். அதிகாரத்தைக் குவிப்பது ஜனநாயகம் அல்ல. கூட்டணி ஆட்சி அமைவது என்பது இயல்பாக மக்களிடமிருந்து எழும் கோரிக்கையாகும். அதிகார பகிர்வை மையமாக வைத்துத் திட்டமிட்டு விசிக செயல்படவில்லை.எனத் தெரிவித்தார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடருமா? என்ற கேள்விக்கு, “தேர்தல் வரட்டும் போது பதில் சொல்கிறேன்” எனக் கூறினார். 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.