Skip to main content

அம்பேத்கர்  நூல் விழாவை புறக்கணித்த திருமாவளவன்; 'டேக் இட் ஈசி' விஜய்!

Published on 30/11/2024 | Edited on 30/11/2024
Thirumavalavan ignored Vijay presence on stage at Ambedkar Book event

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரும், வாய்ஸ் ஆஃப் காமென் எனும் அமைப்பின் நிறுவனருமான  ஆதவ் அர்ஜுனா என்பவர், "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் " எனும் நூலைத் தொகுத்திருக்கிறார். அம்பேத்கர் பற்றி பிரபல ஆளுமைகள்  பலரும் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம்பிடித்துள்ளன.

இந்த நூல் வெளியிட்டு விழா சென்னையில் டிசம்பர் 6 தேதி நடைபெறவுள்ள நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் நூலை வெளியிட முதல் நூலை விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பெற்றுக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த தகவல் வெளியானதில் இருந்தே தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதவாது, திமுக தான் எங்களின் அரசியல் எதிரி என்று பிரகடனப்படுத்திய விஜய்யுடன், அதே கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் இந்த விழாவில் மேடையை பகிர்ந்து கொள்ளலாமா? என்று சர்ச்சை ஏற்பட்டதினால் அரசியல் பரபரப்பு உருவானது.

அதற்கேற்ப, விஜய்யும், திருமாவளவனும் ஒரே மேடையில் இருப்பதும், நூலை விஜய் வெளியிட அதனை திருமாவளவன் பெற்றுக்கொள்வதையும் திமுக தலைமை உட்பட திமுகவினர் யாரும் ரசிக்கவில்லை. இந்த விழாவை திருமாவளவன் தவிர்க்க வேண்டும் என்கிற குரல் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளில் இருந்தே எதிரொலிக்கவும் செய்தது. திமுக தலைமை தரப்பிலிருந்து திருமாவளவனிடம் இதை வலியுறுத்தவும் செய்தனர். ஆனால், திருமாவளவனிடம் விவாதித்த ஆதவ் அர்ஜுனா, “அரசியலுக்கும் நிகழ்ச்சிக்கும் சம்பந்தமில்லை. அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள் ஒரே மேடையில் இருப்பது ஆரோக்கியமான விசயம்தானே” என்று சொல்லியிருக்கிறார். இதனால், விழாவில் கலந்துகொள்ளும் முடிவில் திருமாவளவன் இருந்துள்ளார்.

இந்த நிலையில், திருமாவளவன் தற்போது நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலை விஜய் வெளியிட, திருமாவளவனுக்கு பதிலாக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு பெற்றுக் கொள்கிறார். இதற்கான அழைப்பிதழ் தயாராகி முக்கிய பிரமுகர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது.

விஜய்யுடன் மேடையை பகிர்ந்து கொள்வதை திருமாவளவன் தவிர்த்துள்ளதன் பின்னணியில் திமுகவின் அழுத்தம் இருந்ததே காரணம் என்று சிறுத்தைகள் தரப்பில் சொல்லப்படுகிறது. திருமாவளவன் தவிர்த்துள்ள அரசியலை அறிந்து, 'டேக் இட் ஈஸி' எனும் தொனியில் புன்னகைத்திருக்கிறார் விஜய் என்கிறார்கள் அதன் விவரமறிந்தவர்கள்.

சார்ந்த செய்திகள்