Advertisment

”சோஷியல் மீடியா இருக்கும்போது எங்களுக்கென்ன கவலை...?” - திருமாவளவன் எடுத்த ராஜதந்திர முடிவு!

வருகிற நாடாளுமன்றத்தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைந்துள்ளன. தினகரனின் அ.ம.மு.க SDPI கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி அதனுடன் மட்டும் கூட்டணியை அமைத்துள்ளது. தமிழர் வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் தினகரனுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்ட்ட நிலையில் நேற்று அவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவுக்கு தன் ஆதரவை தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி என்று அறிவித்து வேட்பாளர் நேர்காணலுடன் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படி தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துவிட்டது.

Advertisment

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, இன்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதன்படி தமிழகம் மட்டுமல்லாதுஆந்திரா, கேரளாவிலும் அக்கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஆந்திராவில் 6 தொகுதிகளிலும் கேரளாவில் 3 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது வி.சி.க. தமிழகத்தைப் பொறுத்தவரை சிதம்பரத்தில் அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இன்னொரு தொகுதியான விழுப்புரத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார்.

Advertisment

இன்று காலை இந்த அறிவிப்பை வெளியிட்ட திருமாவளவன், சிதம்பரத்தில் தனி சின்னத்தில் போட்டியிடப் போவதாகவும், விழுப்புரத்தில் தங்கள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். 'திமுக இதை வலியுறுத்தியதா?' என்றுஇது குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பிய பொழுது, "இது முழுக்க முழுக்க எங்கள் கட்சியால், முழுமனதுடன் எடுக்கப்பட்ட முடிவு. இரண்டு தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் நாங்கள் எடுத்த ராஜதந்திர முடிவு. இதில் எந்த கட்டாயமுமில்லை, நாங்கள்தான் எங்கள் கூட்டணி கட்சியின் சின்னத்தை பயன்படுத்துகிறோம்" என்று பதிலளித்தார். தங்களுக்கு சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் தாமதிப்பதாகவும், தாங்கள் கேட்ட இரண்டு சின்னத்தையுமே வேறு கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் திருமாவளவன். இந்தத் தேர்தலில் எந்த சின்னம் என்று விரைவில் தெரிய வரும். "இது சமூக ஊடகங்களின் காலம். அதனால் எந்தச் சின்னம் என்றாலும் சமூக ஊடகங்களின் துணையுடன் அதை விரைவில் மக்களிடம் கொண்டு சேர்ப்போம்” என்று நம்பிக்கையுடன்கூறியுள்ளார் திருமாவளவன்.

vck thiruma valavan Thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe