thirumavalavan criticizes vijay in villupuram

விழுப்புரம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

அப்போது அவர், “உண்மையிலேயே திராவிட இயக்கம், பெரியார் இயக்கம் ஆட்சி பீடத்திலேயே இருக்கிற போது, அக்கட்சியுடன் இடதுசாரிகள் இருக்கிற போது அந்த கூட்டணியில் விசிக இருக்கிற போது சாதிவெறி இந்த அளவிற்கு தாண்டவம் ஆடுகிறது என்றால் பா.ஜ.கவும், அதோடு இருக்கிற சாதியவாதிகளும் வலுப்பெற்றால் என்ன நிலைமை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பட்டியலின, பழங்குடியின மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை தயவு கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். நம்மோடு கருத்தில் ஒன்றி நம்மோடு சேர்ந்து பயணிக்கக் கூடிய நிலையிலும் கூட சாதியவாதம் இன்னும் இங்கு கோலோச்சுகிறது.

Advertisment

ஆனால், சாதியவாதத்தை நியாயப்படுத்துவார்கள் இங்கு ஆட்சிக்கு வந்தால் என்ன நிலை ஆகும்?. சாதிய அடிப்படையிலான பாகுபாடை களைவதற்கு எந்த திட்டமும் இல்லாத பா.ஜ.கவும், அவர்களோடு கை கோர்த்து நிற்கிற சாதியவாத கும்பலும், அதிகார வலிமை பெற்றால் இங்கு நிலை ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த ஆட்சியில் தானே இப்படி நடக்கிறது, அதனால் கூட்டணியில் இருந்து வெளியே வாருங்கள் என்கிறார்கள். தேர்தல் தொடர்பாக முடிவு என்பது வேறு; முரண்பாடுகள் அடிப்படையில் நமக்கு இடையில் இருக்கிற உரசல்கள் என்பது வேறு. இரண்டையும் சேர்த்து குழப்பிக்கொள்ள கூடாது.

திருமாவளவன் நாளைக்கு முதலமைச்சராக இருந்தாலும் கூட, சாதிய வன்கொடுமைகளை தடுத்துவிட முடியாது. 24 மணி நேரத்தில் உத்தரவு போட்டு தடுத்துவிட முடியாது. இதுதான் யதார்த்தம். ஆயிரக்கணக்கான தலைமுறைகளாக இந்த மண்ணிலே நீடித்து இருக்கும் இந்த சாதிய பாகுபாடுகளை கலைந்து எறிவதற்கு இன்னும் பல தலைமுறைகள் தேவைப்படலாம். இது தவறு, இது குற்றம் என்ற புரிதல் உள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.நடிகர் ஒருவர் கட்சி தொடங்கிவிட்டார். இந்த இளைஞர்கள் எல்லாம் அந்த பக்கம் ஆட்டு மந்தைகள் போல் திரும்புவார்கள். ஒரு நடிகரின் பின்னால் இளைஞர்கள் அப்படி திரும்புவார்கள் என்றால் அந்த இளைஞர்கள் எனக்கு தேவையில்லை. அப்படிப்பட்ட இளைஞர்களை வடிகட்டி வெளியேற்றுவது தான் கட்சிக்கு சிறப்பு.

Advertisment

புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு, பகுத்தறிவு பகலவன் பெரியாரை ஏற்றுக் கொண்டு, பாட்டாளி மக்களின் விடுதலைக்கு கோட்பாட்டை வழங்கிய மாமேதை கார்ல் மார்க்ஸையும் புரிந்து கொண்டு திருமாவளவனோடு பயணிப்பவர்கள் தான் உண்மையான சிறுத்தைகளாக இருக்க முடியும். அவர்கள் தான் எனக்கு தேவை; அவர்கள் தான் என்னுடன் எப்போதும் பயணிக்கக் கூடியவர்கள். அவர்களை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது; திசைமாற்ற முடியாது; மடைமாற்ற முடியாது” என்று தெரிவித்தார்.