“துரோகமிழைக்கும் பாஜகவை தோளில் சுமக்கும் என்.ஆர் காங்கிரஸ், விழித்துக்கொள்ள வேண்டும்..” - திருமாவளவன்

aThirumavalavan condemn  BJP in pondycherry issue

தமிழகத்துடன் நடந்து முடிந்த புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. இதில், தற்போது என்.ஆர். காங்கரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி மட்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். இன்னும் அங்கு எந்த அமைச்சர்களும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், அங்கு மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், “புதுச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சதி நடவடிக்கையில் பாஜக இறங்கியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் முன்பாகவே நியமன எம்.எல்.ஏக்களை நியமித்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்ற முயலும் பாஜகவின் சதியை முறியடிக்க திமுக உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலைக்கு வாங்கப்பட்ட நபர்களைத் தேர்தலில் நிறுத்தி 6 இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தற்போது என். ரங்கசாமி, முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ யாரும் இன்னும் பதவியேற்கவில்லை. இதனிடையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி தானே ஆட்சி அமைக்கும் சதி முயற்சியில் பாஜக இறங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதன் ஒரு அங்கமாக பாஜகவைச் சேர்ந்த மூவர் அவசரம் அவசரமாக நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாஜகவின் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. முதல்வர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கூட்டணி கட்சி என்றும் பாராமல், என்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையே விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள என். ரங்கசாமி, கரோனா தொற்றின் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது. மக்களுடைய தீர்ப்புக்கு எதிராக அங்கே ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜகவின் சதித் திட்டத்தை முறியடிக்க புதுச்சேரியில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

புதுவையில்6 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உடனடியாக இதில் தலையிட வேண்டும்.புதுச்சேரியில் பாஜக தலைமையிலான மதவாத ஆட்சி அமையாமல் தடுக்கத் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இத்துடன், நட்புக்குத் துரோகமிழைக்கும் பாஜகவை தோளில் சுமக்கும் என்.ஆர்.காங்கிரஸ், இந்த நிலையிலாவது விழித்துக்கொள்ள வேண்டுமென்றும்; தமக்கு எதிராக நேரவிருக்கும் வரலாற்றுப் பழியைத் தவிர்த்துக்கொள்ள, தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டுகிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pondychery Thirumavalavan
இதையும் படியுங்கள்
Subscribe