ADVERTISEMENT

''திரைப்படத்தை எதிர்த்து, நாட்டிலுள்ள எல்லா பிரச்சனைகளையும் மூடிவிட்டார்கள்''-சீமான் ஆவேசம்

03:37 PM Nov 21, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடல்தீபன் படத்திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்,

''கடந்த 12 நாட்களாக ஜெய்பீம் திரைப்படத்தை எதிர்த்து நாட்டிலுள்ள எல்லா பிரச்சனைகளையும் மூடிவிட்டார்கள். அணுக்கழிவை இடிந்தகரையிலேயே புதைக்கலாம் என்று ஒன்றிய அரசு சொல்லியிருக்கிறது. இதை ஏற்கிறீர்களா எதிர்க்கிறீர்களா? என்றால் பதில் இல்லை. நீட் தேர்வால் அனிதா உயிரிழந்தபோது நீட்டி முழக்கி அழுதவர்கள் இன்று இவர்கள் ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் நீட் தேர்வால் ஆறு குழந்தைகள் இறந்து இருக்கிறார்கள். இதற்குப் பதில் என்ன? ஆட்சிக்கு வந்தால் நீட்டை நீக்குவோம் என்றீர்களே அதற்கு என்ன பதில்? பள்ளி, கல்லூரிகளுக்குப் பிள்ளைகள் செல்ல முடியவில்லை. ஆசிரியர்களே பிள்ளைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அவமானம் தாங்காமல் பிஞ்சுகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி எவரும் பேசவே இல்லை. வன பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு சட்டம் வந்தால் காடுகளை முழுக்க தனியார் மையப்படுத்தி விடுவார்கள். அந்த ஆபத்து தெரிந்து நாம் போராடுகிறோம். அதைப் பற்றி பேச்சு கிடையாது.

மீன்வள சட்டம். கடலில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் கடலுக்கு போகும் போது இரண்டு லட்சம் ரூபாய் கட்டிவிட்டுதான் போகவேண்டும். இரண்டு லட்ச ரூபாய் இருந்தால் மீனவன் எதற்கு மீன்பிடிக்க போகிறான். அதை வைத்தே வாழ்ந்திருக்க மாட்டானா? 12 நாட்டிகல்லுக்குள்தான் மீன் பிடிக்க வேண்டும். அதுவும் பத்தாயிரம் ரூபாய் மதிப்புக்கு மேல் மீன்பிடிக்க கூடாது. நான் பிடித்த மீனின் மதிப்பு பத்தாயிரம் ரூபாயா, ஏழாயிரம் ரூபாயா என்பது கரைக்கு வந்தால் தானே தெரியும். இது என் கடல், என் நிலம், என் உரிமை. 12 நாட்டிக்கல் மைலுக்கு கொஞ்சம் தள்ளி சென்று விட்டால் படகை பறித்துக் கொள்ளலாம், வாழ்நாள் முழுக்க மீன் பிடிக்க தடை என இந்த சட்டம் சொல்கிறது. இதைப்பற்றி ஒருவர் பேசியது உண்டா? சத்தமில்லாமல் திண்டுக்கல்லில் நான்கு வழிச்சாலை போடுகிறார்கள். நாங்கள் கேட்கவே இல்லையே... நாங்கள் கேட்டது கச்சத்தீவை மீட்க சொல்லி, நீட் வேண்டாம் என்கின்றோம், ஜிஎஸ்டி வேண்டாம் என்கிறோம். நாங்கள் எதிர்த்து போராடியதை எதையுமே கேட்பதில்லை, நாங்கள் போராடாததையெல்லாம் திணிப்பது. ஜெய்பீம் சிறந்த படம். மக்களினுடைய வலியை தூக்கி ஒரு தலைமுறைக்கு உணர்த்துகிற படம், இனிமேல் இதுபோல் ஒன்று நடந்து விடக்கூடாது என உணர்த்துகிற படம்.

காடுவெட்டி குருவை ஆதரித்துவிட்டார் சீமான் ஜாதி சாக்கடை, சாதி வெறியர் என்று எழுதி விமர்சிக்கிறார்கள். இதை எழுதுவது யாருடைய ஆட்கள் என தெரியுமா? காடுவெட்டி குருவின் நினைவிடத்தில் விழுந்து கும்பிட்டு மாலை வைத்து வாக்கு கேட்டவர்கள்தான் என்னை சாதி வெறியர்கள் என்கிறார்கள். அவரது மகன் கனலை கூட்டிக்கொண்டு அறிவாலயத்தில் சந்தித்து எங்களை ஆதரியுங்கள் என்று மாலையைப் போட்டு வரவேற்ற மகத்தான பெருமக்கள் என்னை சாதி வெறியன் என்கிறார்கள். அவரது மருமகன் மனோஜை கூப்பிட்டு, மகளைக் கூட்டிக்கொண்டு சென்று அறிவாலயத்தில் சந்தித்து உதயநிதி, காடுவெட்டி குருவுக்கு மாலை அணிவிக்கிறார். அப்போது வராதா சாதிவெறி. டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்கும்பொழுது சட்டசபையில் பேசுகிறார், 'பாலுத்தேவரின் மகன் ராஜா தேவர்' என பேசுகிறார். பக்கத்தில்தான் முதல்வர் இருக்கிறார். அதையெல்லாம் பார்த்த பெருந்தகைகள். அமைச்சர் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் திருச்சியில் நடந்த ரெட்டியார் மாநாட்டில் பேசிய பேச்சுக்கள் இருக்கின்றன. அவை எல்லாம் ஏன் உங்கள் கண்களுக்கு உறுத்தவில்லை. அவையெல்லாம் ஏன் பிரச்சனையாகவில்லை. அதையெல்லாம் ஏன் பேச மாட்டுகிறீர்கள். உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? நாங்கள் மட்டும்தான் இந்த நாட்டிலேயே சாதி பார்த்து ஓட்டு போட்டால் அந்த ஓட்டு எனக்கு தீட்டு என பேசிய ஒரே அரசியல் இயக்கம் நாம் தமிழர் மட்டுமே'' என்றார் ஆவேசமாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT