
கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை முதலே அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, கே.என்.நேரு. உதயநிதி, ரகுபதி எனப் பல்வேறு துறை அமைச்சர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்தித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து கருத்துக்களைத்தெரிவித்துவிட்டுச் சென்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த கைது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “மனிதநேயமற்ற முறையில் பாஜகவின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது. கண்டனத்திற்குரியது. செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். தங்களுக்கு எதிரான அரசியல் சக்திகளை விசாரணை அமைப்புகள் மூலம் பழிவாங்குவது மட்டுமே பாஜகவுக்கு தெரிந்த ஒரே வழி. பாஜகவின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக அஞ்சாது.இதுபோன்ற அடுக்கு முறைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறிய பிறகும் நெஞ்சு வலி வரும் அளவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது அமலாக்கத்துறை. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்'' எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)