Skip to main content

'ஒருதலைக் காதல் என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளை தடுக்க தனிச்சட்டம் வேண்டும்'-பாமக ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 14/10/2022 | Edited on 14/10/2022

 

"There should be a separate law to prevent atrocities in the name of one-sided love" - ​​Pmk Ramadoss emphasized

 

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சுவாதி கொலை வழக்கை போன்றே சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் இளம்பெண் ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர் சதீஸ் தற்பொழுது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.  மேலும் மாணவியின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை பரங்கிமலை புறநகர் தொடர்வண்டி நிலையத்தில், காதலை ஏற்க மறுத்ததற்காக மாணவி சத்யா தொடர்வண்டி முன் தள்ளிவிட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே, அவரது தந்தை மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்பட்ட இந்த கயமை கண்டிக்கத்தக்கது. மாணவி சத்யா, அவரது தந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவும், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரும் சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சதீஷ் கஞ்சா போதைக்கு அடிமையானதால் அவருடனான காதலை சத்யா முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் மாணவி சத்யாவை சதீஷ் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் உச்சகட்டமாக நேற்று பிற்பகலில் பரங்கிமலை தொடர்வண்டி நிலையத்தில் தகராறு செய்த சதீஷ், காதலை ஏற்க மறுத்த சத்யாவை தொடர்வண்டி முன் தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறார். இதை தாங்க முடியாத சத்யாவின் தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்யாவின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வரும் நிலையில்,  சத்யாவின் கொலை மற்றும் தந்தையின் தற்கொலையால் அந்த குடும்பமே உருக்குலைந்து போயிருக்கிறது.

 

"There should be a separate law to prevent atrocities in the name of one-sided love" - ​​Pmk Ramadoss emphasized

 

காதல் புனிதமானது என்பதில் ஐயமில்லை. இருவர் மனமும் ஒன்றுபடும் போதும், ஒருவரின் உணர்வுகளை இன்னொருவர் மதிக்கும் போதும் தான் காதல் புனிதமடையும். தொடக்கத்தில் சதீஷை காதலித்த சத்யா, பின்னர் அவரது தீய பழக்கங்களை அறிந்து தான் விலகிச் சென்றுள்ளார். அதை மதித்து சதீஷ் விலகியிருக்க வேண்டும். அது தான் சத்யா மீது சதீஷ் கொண்ட காதலுக்கு மரியாதையை சேர்த்து இருக்கும். அதற்கு மாறாக, நான் விரும்பினால் நீயும் விரும்ப வேண்டும்; இல்லாவிட்டால் படுகொலை செய்வேன் என்பது அரக்கத்தனமானது. இந்த கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

 

சத்யா காதலிக்க மறுத்த நிலையில், அவரிடம் கடந்த சில மாதங்களில் சதீஷ் 5 முறை தகராறு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு முறை சத்யா படிக்கும் கல்லூரிக்கு சென்ற சதீஷ், அங்கு பலர் முன்னிலையில் அடித்து உதைத்ததாக தெரிகிறது. இரு முறை சத்யாவை கொலை செய்ய முயன்றதாக சதீஷ் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு கட்டத்தில் இது குறித்து சத்யா குடும்பத்தினர்  காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால், இருவரின் குடும்பத்தினரும் காவல்துறையில் பணி செய்வதை காரணம் காட்டி, சதீஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்து   காவல்துறையினர் அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட துணிச்சல் தான் மாணவி சத்யாவை கொலை செய்ய தூண்டியிருக்கிறது. காவல்துறையின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

 

ஆண்களைப் பெற்ற பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும்; அதற்கும் மேலாக பெண்களை மதிக்கும் குணத்தை கற்றுத்தர வேண்டும். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை நல்வழிப்படுத்த தவறியதன் விளைவு தான் மாணவி சத்யாவின் படுகொலை ஆகும். ஒருதலை காதலால் பெண்கள் படுகொலை செய்யப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் சுவாதி என்ற பெண் பொறியாளரும், 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி தாம்பரம் தொடர்வண்டி நிலையத்தில் ஸ்வேதா என்ற மாணவியும் காதலிக்க மறுத்ததால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டனர். 2016-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி விழுப்புரத்தையடுத்த வ. பாளையம் கிராமத்தில் காதலிக்க மறுத்த நவீனா என்ற சிறுமியை செந்தில் என்ற மிருகம் உயிருடன் எரித்துக் கொலை செய்தது. காதலிக்க மறுத்ததற்காக படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்களின் பட்டியலில் மிகவும் நீளமானது. ஒரு தவறும் செய்யாத பெண்கள், வெறி பிடித்த  மிருகங்களை காதலிக்க மறுத்ததற்காக கொலை செய்யப்படுவதை நாகரிக சமுதாயம் அனுமதிக்கக்கூடாது.

 

தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம் என்று கூறப்பட்டாலும் கூட, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் பெண்களும் அச்சமின்றி சுதந்திரமாக சென்று வர முடியாத நிலைமை தான் இப்போதும் தொடர்கிறது. பெண்களை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். இதற்காக மகளிர் தனிக்காவல் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் தடுக்க  தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்