ADVERTISEMENT

“அதிமுக பாஜக இடையே எந்த பிரச்சனையும் இல்லை” - செல்லூர் ராஜு

01:44 PM Sep 21, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் அதிமுகவும், பாஜகவும் சமீபகாலமாக தமிழகத்தில் மோதிக்கொள்கின்றன. தற்போது அதிமுக - தமிழக பாஜக இடையே அடிக்கடி வார்த்தை போர் நிலவி வருகிறது. தமிழக தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் தலைவரான ஜெயலலிதா குறித்து பேசியது அக்கட்சி தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுக தலைவர்கள் பாஜக மீதும், அண்ணாமலை மீதும் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தனர். பின்னர் இருகட்சித் தலைவர்களையும் அழைத்து டெல்லி தலைமை பேசிய பிறகு வார்த்தைப் போர் சற்று தணிந்திருந்தது. இது தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்தும் அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதையடுத்து அண்ணா குறித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி. சண்முகம் போன்றவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இது தொடர்பாக மாறி மாறி இரு கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். இறுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தற்போது இல்லை; கட்சி முடிவையே நான் சொல்கிறேன். தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பா.ஜ.க.வுக்குத் தான் பாதிப்பு. தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நோட்டாவை கூட தாண்ட முடியாது. பா.ஜ.க.வுக்கு காலே இல்லை; எப்படி தமிழ்நாட்டில் காலூன்றும்? என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் செல்லூர் ராஜு அதிமுக பாஜக இடையே பிரச்சனை இல்லை என்று தெரிவித்தார். இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், “அதிமுக பாஜக இடையே பிரச்சனை என நாங்கள் கூறினோமா? பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தவறாக பேசுகிறார் என்றுதான் கூறினோம். மோடி, அமித்ஷா, நட்டா எங்களை மதிக்கிறார்கள்; அதுபோதும். இனி வரும் தேர்தலில் மோடிதான் பிரதமராக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT