Advertisment

“தமிழகத்தைச் சீரமைப்போம்; பாதையிலும் பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை..” - கமல்ஹாசன்!

publive-image

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (06/04/2021) காலை 07.00 மணியளவில் தொடங்கி, மாலை 7 மணி அளவில் முடிவடைந்தது. பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து விறுவிறுப்பாக வாக்களித்தனர். இதில், கடைசி ஒரு மணி நேரம் கரோனா நோயாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து, பி.பி.இ. உடையை அணிந்துவந்த கரோனா நோயாளிகள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

Advertisment

இந்நிலையில், மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தலில் பங்கேற்ற அனைத்துத்தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தும், தனது அரசியல் பயணப் பாதைகுறித்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தின் 16வது சட்டமன்றத் தேர்தலில் 72% வாக்குப் பதிவு நிகழ்ந்திருக்கிறது. கரோனா பெருந்தொற்று போன்றதொரு அச்சுறுத்தல் தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன் இருந்ததில்லை. இந்த இக்கட்டான சூழலிலும் 72% வாக்காளர்கள் தங்களது கடமையை ஆற்றியிருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. அரசியலாளர்களின் பொறுப்பைக் கூட்டுகிறது. தமிழக மக்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் உரித்தாகுக.

Advertisment

100 சதவீத பங்கேற்பே ஜனநாயகம் சென்றுசேர வேண்டிய இடம். இனிவரும் தேர்தல்களில் நம் பங்களிப்பு இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு ஜனநாயக நம்பிக்கைவாதியாக என் ஆசை.

இந்தத் தேர்தலில் என்னோடு கைகோர்த்து களம்கண்ட மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள், தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், சக போட்டியாளர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட சகலருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது. என்னைப் பொருத்தவரை இந்தத் தேர்தல் ஒரு புதிய தொடக்கம். எனது கட்சியினருக்கும் இது புதிய அனுபவம். நிறைய அனுபவங்களைக் கற்று முன்னகர்ந்திருக்கிறோம். ‘மக்கள் அன்பைவிட மகத்தான பலம் இல்லை’ என்பது அதில் முதன்மையானது.

தமிழகத்தைச் சீரமைப்போம் என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல. அது ஒரு கூட்டுக் கனவு. அதை நோக்கிய பாதையிலும் பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை. மண்ணை, மொழியை, மக்களைக் காக்க இன்றுபோல் என்றும் களத்தில் நிற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

kamalhaasan MNM
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe