/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1_478.jpg)
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, பின் ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் எகிப்து நாட்டிற்குச் செல்கிறார்.
அமெரிக்கப் பயணத்திட்டத்தின் படி இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதித்தார். முன்னதாக வெள்ளை மாளிகை வந்த பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடன் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். இதனை அடுத்து பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக உரையாற்றினார். அவர் கூறுகையில், “அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது எப்போதும் பெரிய மரியாதை. இந்திய பிரதமர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றுவது இதுவே முதல் முறை. 140 கோடி இந்தியர்கள் சார்பாக இந்த அவையில் பேச வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய கவுரவம். இந்திய அமெரிக்க மரபணுவில் ஜனநாயகம் உள்ளது, ஜனநாயகம் மக்களை ஒருங்கிணைக்கிறது. உக்ரைன் ரத்யா போரை முடிவுக்கு கொண்டு வர நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். விரைவில் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்.
தீவிரவாதம் மனித குலத்திற்கு எதிரி. அதை ஆதரிக்கும் ஏற்றுமதி செய்யும் அனைத்து சக்திகளையும் நாம் முறியடிக்க வேண்டும். 9/11 நடந்து 20 வருடங்கள் கடந்த பின்னும், மும்பையில் 26/11 தாக்குதல் நடந்து 10 வருடங்கள் கழிந்த நிலையிலும் தீவிரவாதம் இன்னும் குறையவில்லை. அந்த கருத்தியல்கள் புதிய அடையாளங்களை எடுத்துக்கொள்கின்றன. ஆனால் அவர்களின் குறிக்கோள் ஒன்றுதான். தீவிரவாதம் மனித குலத்தின் எதிரி” என்றார். பிரதமர் மோடியின் பேச்சை பாராட்டி உறுப்பினர்கள் பலமுறை எழுந்து நின்று கை தட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்காவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் "இந்தியா தன்னை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என நீண்டகாலமாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறது; ஆனால், அங்குள்ள மத சிறுபான்மையினருக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதாகவும், விமர்சனம் செய்பவர்களை அடக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன; அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?" எனஅமெரிக்க பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அவர், "ஜனநாயகம் எங்கள் டி.என்.ஏ.-வில் இருக்கிறது; ஜனநாயகம் எங்கள் நரம்புகளில் ஓடுகிறது; ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளை எங்கள் அரசு கொண்டிருக்கிறது; அதன் அடிப்படையில் எங்கள் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதன்படி நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது; இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களில் சாதி, மதம், வயது அல்லது இருப்பிடத்தின் அடிப்படையில் எந்தவித பாகுபாடும் இல்லை" என தெரிவித்தார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் 2014 ஆம் ஆண்டில் அவர் பிரதமராகப் பதவியேற்ற பின் அவரது 2 ஆவது செய்தியாளர் சந்திப்பாகும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)