“அவர்களின் நிலைப்பாடே எங்களுடையது” - எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த ஜான் பாண்டியன்

 'Their position is ours' - John Pandian who gave Edappadi a shock

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது.

இடைத்தேர்தலில் ஆதரவு கோரி பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் சந்தித்த நிலையில், தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு நேரில் சென்ற ஓ.பன்னீர்செல்வம் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஆலோசித்தார். அதனைத் தொடர்ந்து ஜான் பாண்டியனும் பாஜக தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின்நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு” எனத்தெரிவித்துள்ளார்.

மேலும், “இடைத்தேர்தல் பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம். இவர்கள் இருவரும் ஒன்றாக சேர வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் பேசி இருந்தோம். பேச்சுவார்த்தை தான் போய்க்கொண்டிருக்கிறது தவிர, யார் நிற்கப் போகிறார்கள்என்பது பற்றியெல்லாம்முடிவு எடுக்கப்படவில்லை. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓபிஎஸ் தரப்பு முடிவு எடுத்துவிட்டது. ஆனால், பாஜக எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, பாஜக முடிவு செய்த பிறகு தான் நாம் முடிவைச் சொல்ல முடியும். கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லி கூட்டணி தலைவர்களைச் சந்திக்கிறார்கள்.” என்றார்.

காலையில் இரட்டை இலை சின்னத்தை வைத்திருப்பவர்களுக்கு ஆதரவு என ஜான் பாண்டியன் கூறியிருந்த நிலையில், தற்போது அவரின் இந்தக் கருத்து எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Erode
இதையும் படியுங்கள்
Subscribe