சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப் பேரவையில் கேள்வி பதில் நேரம் துவங்கியது. கேள்வி பதில் நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக பேச முற்பட்டார்.
எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் நாளை எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தற்போது அரசினர் தீர்மானம் உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு பின் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து அவையின் முன்னவர் மற்றும் அமைச்சருமான துரைமுருகன், ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானம் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை நிறைவேற்ற அவையில் இருந்த 4ல் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனும் நிலையில் 146 உறுப்பினர்கள் அவையில் இருந்தனர். அதில் பாஜக உறுப்பினர்கள் இருவர் மட்டும் ஆதரவு தராத நிலையில் 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பின் ஆளுநரின் செயல்பாட்டுக்கு எதிரான அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் முன் மொழிந்தார். பிற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இத்தீர்மானத்தை வரவேற்று பேசினர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, “இந்த அரசு எப்பொழுது பொறுப்பெடுத்தாலும், எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரையும் அவமானப்படுத்துவதில் இவர்கள் குறிக்கோளாக இருக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆளுநரைப் பற்றி பேசும்போது கோப்புகளை நெடுநாள் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக சொல்கிறார்கள். அதற்கு காரணத்தையும் சொல்கிறார்கள். சட்டத் திட்டங்களைப் பார்த்து சரியாக இருந்தால் ஒப்புதல் அளிக்கிறார். என்ன செய்தாலும் குற்றம் எனும் போக்கில் கவர்னரை எதிர்த்து இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்” எனக் கூறினார்.