ADVERTISEMENT

நன்றி.. நன்றி.. நன்றி..! - மு.க.ஸ்டாலின் கடிதம்

07:59 PM Mar 27, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ஈரோட்டில் இரண்டு நாட்கள் நடைபெற்ற திமுக மண்டல மாநாடு குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கு எழுதியிருக்கும் கடிதம்:

ADVERTISEMENT

’’என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நெஞ்சார்ந்த நன்றிக் கடிதம்.


அலை அலையாய்த் தொண்டர் பட்டாளம், ஆர்ப்பரித்து வந்த இளைஞர் படை, ஆர்வத்துடன் திரண்டிருந்த மகளிர், இது நமக்கான மாநாடுதான் எனப் பரவசத்துடன் வந்து பார்வையிட்ட பொதுமக்கள் என எத்திசையும் புகழ் மணக்கும் தமிழ் போல, எப்பக்கம் திரும்பிப் பார்த்தாலும் மனிதத் தலைகளால் நிரம்பி வழிந்த மாநாட்டுப் பந்தலும், வெள்ளை மாளிகை போன்ற கொள்ளை அழகுடன் விளங்கிய மாநாட்டு வெளிமுகப்பு கடந்து நெடுஞ்சாலை வரை நீண்டிருந்த மக்கள் பேரலையும் , திராவிட அரசியல் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலிமையான-ஒளிமயமான எதிர்காலத்தைப் பறைசாற்றியது.


சாலைகள் அனைத்தும் ரோம் நகர் நோக்கி என்று பழைய வரலாற்றில் சொல்லப்படுவதுபோல, சாலைகள் எல்லாம் ஈரோடு நோக்கி என்கிற புதிய வரலாற்றைப் படைத்திருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். மண்டல மாநாட்டை மாநில மாநாடு போல வெற்றி பெறச் செய்யுங்கள் என்ற எனது அன்பு வேண்டுகோளை ஏற்று, சரித்திர வெற்றியைச் சாதித்துக் காட்டியிருக்கும் கழக உடன்பிறப்புகளின் பேராற்றலை தமிழக அரசியல் களம் ஆச்சரியத்துடன் பார்க்கிறது.


இந்த வரலாற்று நிகழ்வை நேரில் காணும் வாய்ப்பு நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு அமையாதபடி உடல்நிலை தடுத்துவிட்டதே என்ற பெருங்கவலை ஏற்பட்டாலும், இந்த வரலாற்று வெற்றிக்கு அடித்தளமே அந்த மகத்தான தலைவர்தானே என எண்ணிடும் போது அந்தக் கவலைகூட காற்றில் கரைந்து, கழகத் தொண்டர்களின் ஒவ்வொரு அணுவிலும் அவர்தானே நீக்கமற நிறைந்திருந்தார் என்ற பெருமிதம் ஏற்படுகிறது.

திராவிட இயக்கத்தின் தனிப் பெரும்தலைவராம் - தன் சிந்தனைகளால் பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சிய புத்துலகச் சிற்பி தந்தை பெரியார் பிறந்த மண் ஈரோடு. அந்த மண்ணில்தான் பெரியாரின் முதன்மைச் சீடராக-இயக்கத்தின் தளபதியாக-எழுத்தாலும் கருத்தாலும் ஏற்றமிகு பேச்சாலும் எழுச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்படுத்திய பேரறிஞர் அண்ணா அவர்கள் செயல்பட்டார். அதே இடத்திற்குத்தான் பல துறை வித்தகர்-முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பெரியாரின் கண்ஜாடையை ஏற்றுச் சென்று, குடிஅரசு பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களுக்கும் தொடர்புடைய முதுபெரும் மண்ணில் ,அவர்களின் கொள்கைகளைக் கட்டிக்காக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தின் இலட்சிய முழக்கமிடும் மண்டல மாநாட்டை நடத்துவது எனத் தீர்மானித்தபோது, மாவட்டக் கழகச் செயலாளர் சகோதரர் சு.முத்துசாமி அவர்கள், கொடுத்த பணியைக் குறையேதுமின்றி நிறைவேற்றி முடிப்பேன் என உறுதிபூண்டு உடனடியாகக் களமிறங்கினார்.


அவர் மட்டும்தான் பணி செய்வாரா? நாங்கள் சும்மா இருந்துவிடுவோமா என மேற்கு மண்டலத்தில் உள்ள ஏனைய மாவட்ட கழகச் செயலாளர்கள் என். நல்லசிவம் - பா.மு. முபாரக் - எஸ்.ஆர். சிவலிங்கம் - வீரபாண்டி ஆ.இராஜா - ஆர். இராஜேந்திரன் - க. செல்வராஜ் - இல.பத்மநாபன் - சி.ஆர்.இராமச்சந்திரன் - இரா. தமிழ்மணி - மு.முத்துசாமி - நா. கார்த்திக் - நன்னியூர் ராஜேந்திரன் - கே.எஸ். மூர்த்தி - பார். இளங்கோவன் ஆகிய 14 பேரும் வரிந்து கட்டிக் களமிறங்கினர். அடடா.. இந்த ஆரோக்கியமான ஆர்வம் மிகுந்த போட்டிதானே அந்நாள் தொட்டு இந்நாள் வரை கழகம் அசைக்க முடியாத ஆலமரமாக வேர்பரப்பி, விழுதுவிட்டு நிற்பதற்குக் காரணமாக இருக்கிறது!

மண்டல மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் என்ற முறையில் மொத்தப் பணிகளையும் தலையில் சுமக்க வேண்டிய பொறுப்புக்குள்ளானவர் முத்துசாமி. அதனை சுகமான சுமையாகக் கருதி, மற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் - முன்னணி நிர்வாகிகள் - மூத்த முன்னோடிகள் என அனைவரையும் ஒருங்கிணைத்து, இரவு-பகல் பாராமல் அவர் செயல்பட்ட காரணத்தால் மண்டல மாநாடு, ஒரு மாநில மாநாட்டிற்குரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

ஈரோடு-பெருந்துறையில் தந்தை பெரியார் திடல் பேரறிஞர் அண்ணா நகர் என்ற புதிய நகரத்தையே பொலிவுடன் உருவாக்கி, அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்து, மாநாட்டை பெருவெற்றி பெறச் செய்ததுடன், நிதிக்குழுத் தலைவர் திரு.பொங்கலூர் நா.பழனிசாமி, நிதிக்குழு செயலாளர் எம்.கந்தசாமி மற்றும் நிதிக்குழு துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள் - கழக நிர்வாகிகள் துணையுடன் மாநாட்டுக்காகத் திரட்டிய நிதியில், செலவு போக, கச்சிதமாக மிச்சம் பிடித்து, 5 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதியைக் கழகத்திற்கு வழங்கியுள்ளதில் முத்துசாமி அவர்களின் சீர்மிகு செயலாற்றலை உணர முடியும்.

அதனைவிட அதிக மகிழ்ச்சி தந்தது எதுவென்றால், தேர்தல் களத்தில் எந்த மண்டலத்தில் ஏற்பட்ட தோல்வியால் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது என்று விமர்சிக்கப்பட்டதோ, அந்த மேற்கு மண்டலத்தின் கழக நிர்வாகிகள் அனைவரும் தோளோடு தோள் நின்று, மாநாட்டுப் பணிகளில் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து, ’பாரடா கழகத்தின் கோட்டையை’ என்று அரசியல் எதிரிகளுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்களே.. இந்த ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும்தான் ஒப்பிலா உவகையைத் தருகிறது. எதிர்காலத்தில் நாம் அடையப் போகும் வெற்றிக்கு அச்சாரமாக அது அமையும்.

இரண்டு நாட்கள் மாநாடு. இரு நாட்களும் சமுத்திரமெனச் சங்கமித்த கூட்டம். மாநாட்டிற்கு முதல்நாள் இரவே பந்தலுக்குச் சென்று பணிகளைக் கவனித்தபோது, மாநாடு தொடங்கிவிட்டதோ என நினைக்குமளவுக்கு ஆண்களும் பெண்களும் சிறார்களும் ஆர்வமாகத் திரண்டிருந்து வரவேற்றதில் உள்ளம் மகிழ்ந்தேன். ஒரு வாரத்திற்கு முன்பாகவே திறந்து வைக்கப்பட்ட திராவிட இயக்க வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சியைப் பார்ப்பதற்காக நாள்தோறும் வந்து சென்றவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டிவிட்டது என்பதையறிந்து பூரிப்படைந்தேன். மாநாட்டிற்கு முதல் நாளும் விடிய விடிய பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிட்டபடி இருந்தனர்.


முதல்நாள் மாநாட்டின் முதல் நிகழ்ச்சியான கழகத்தின் இருவண்ணக் கொடியேற்று நிகழ்வுக்கு வந்தபோது கட்டுக்கடங்காத கூட்டத்தில் எங்கள் கார்களெல்லாம் படகுகள் போல மிதந்தன; ஊர்ந்து நகர்ந்தன. மலர்தூவி வரவேற்ற தொண்டர்களின் வாழ்த்து முழக்கங்களோடு, இனமானப் பேராசிரியர் மற்றும் முன்னோடிகள் சூழ்ந்திருக்க, திருமதி.சற்குணபாண்டியன் நினைவு கொடிமேடையில் 65 அடி உயரக் கொடிக் கம்பத்தில் கொடியை ஏற்றிவைத்தார் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் அவர்கள். அதனைத் தொடர்ந்து மாநாட்டைத் திறந்து வைத்தார் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா அவர்கள்.


பெரியார் பிறந்த மண்ணில் அவர் போற்றிய பெண்ணுரிமைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சகோதரி சுப்புலட்சுமி செகதீசன் அவர்கள் மாநாட்டுக்குத் தலைமை வகிக்க, வரவேற்புக் குழுத் தலைவர் முத்துசாமி அவர்களின் உரையுடன் தொடங்கிய மாநாட்டில், உறைவிட்டுக் கிளம்பிய வாள்போல ஒவ்வொரு சொற்பொழிவாளரும் கொள்கைகளை முழங்கிய விதத்தையும், வீச்சையும் ,அவர்கள் முன்வைத்த கருத்தையும் தனிப் புத்தகமாகவே வெளியிடலாம்.


திராவிட இயக்கத்தின் தியாகங்கள், சாதனைகள், இந்தியாவுக்கே வழிகாட்டிய திட்டங்கள், பெரியார்-அண்ணா-கலைஞர் உள்ளிட்ட ஆளுமைமிக்க தலைவர்கள் உருவாக்கிய சமுதாய மாற்றங்கள், இன்றைய அவலம் நிறைந்த மத்திய ஆட்சி, அவமானகரமான மாநில ஆட்சி, பறிக்கப்படும் உரிமைகள், தத்தளிக்கும் தமிழகம், அதனை மீட்டு சுயமரியாதையும் சுயாட்சியும் கொண்ட மாநிலமாக மாற்றக்கூடிய தி.மு.கழகத்தின் வலிமை என இலட்சக்கணக்கான தொண்டர்கள் முன் ஒரு பல்கலைக்கழகப் பாடத்திட்டம்போல கொள்கை வகுப்பெடுக்க இந்த இயக்கத்தைத் தவிர வேறெந்த இயக்கத்தால் இயலும்?


மாநாட்டின் இரண்டாம் நாள் மதிய இடைவேளைக்கு முன் கழக முதன்மைச் செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள், தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி உருக்கமாக பேசியது மேடையில் இருந்தவர்களை மட்டுமல்ல, அனைவரையும் நெகிழச் செய்தது. திராவிட இயக்கத்தின் முதுபெருந்தலைவரான இனமானப் பேராசிரியப் பெருந்தகை அவர்கள், தனது 95 வயதிலும், முதுமையைப் பொருட்படுத்தாமல் இரண்டு நாட்களும் மேடையிலேயே தொடர்ந்து அமர்ந்திருந்தது மாநாட்டிற்கே பெருமை. அவர், தனது மாணக்கர்களான கழகச் சொற்பொழிவாளர்களின் கருத்துரைகளைக் கேட்டபோது, எதிரில் திரண்டிருந்த இலட்சோபலட்சம் தொண்டர்களும்-இளைஞர்களும் திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கங்களை கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்கள் போல ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் கேட்டு மகிழ்ந்தனர்.

தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயர்களைச் சொன்ன போதெல்லாம் வரவேற்பு;தலைவர் கலைஞரின் பெயர் உச்சரிக்கப்பட்டதெல்லாம் புத்துணர்வு;தி.மு.கழகத்தின் பெருமைமிகு சாதனைகளைச் சொல்லும்போதெல்லாம் உத்வேகம்;உங்களில் ஒருவனான என் மீது நம்பிக்கை வைத்துப் பேசியபோதெல்லாம் வாழ்த்து முழக்கங்கள்; கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் என்ற போதெல்லாம் சூளுரை ; என கழகத் தொண்டர்கள் காட்டிய பேரார்வத்தை எண்ணி எண்ணி இறும்பூதெய்துகிறேன்.

தமிழ்நாட்டின் நலனைக் காக்கவும், இந்தியத் திருநாட்டின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்கவும், தாய்மொழியாம் தமிழ் மொழி-தாய்நிலமாம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கவும், மேற்கு மண்டலத்தின் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கவும் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து, தீர்மானக்குழுத் தலைவர் திரு. என்.கே.கே.பெரியசாமி உள்ளிட்ட உறுப்பினர்கள் வடித்து கொடுத்த சிறப்புமிக்க 50 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதுடன், சிறப்புத் தீர்மானமாக, தமிழகத்தின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக எந்த மாற்றுத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும்-அதற்கு மாநில அரசு உடன்பட்டாலும் தமிழினத்தைத் திரட்டி கழகம் போர்க்கோலம் பூண்டிடும் என எச்சரிக்கும் தீர்மானத்தை நானே முன்மொழியும் வாய்ப்பு அமைந்தது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு தீர்மானங்கள் குறித்தும் தனி மடலே எழுதும் அளவுக்கு அவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

கழகத்தின் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள் திருக்குறள் போல , தன் சிறப்புரையில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் வகையில் திராவிட சித்தாந்தத்தை நமக்குப் போதித்தபிறகு, மாநாட்டு நிறைவுரையாற்றும் பெரும் வாய்ப்பு-முதல் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

திரண்டிருந்த கூட்டத்தையும் அதன் எழுச்சி மிக்க வாழ்த்தொலியையும் கேட்ட போது, பேச வார்த்தைகளின்றி உறைந்து நின்றேன். எனினும், கடந்த அரை நூற்றாண்டு காலமாக, கழக மாநாடுகள் ஒவ்வொன்றிலும் தலைவர் கலைஞர் அவர்கள் தனது நிறைவுரை மூலம் கழகத் தொண்டர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் புதிய செய்தியை விடுத்து, அரசியல் களத்தின் போக்கையும் நோக்கையும் மாற்றியதை நினைவில் கொண்டு, பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல, உங்களில் ஒருவனான நான் எனது நிறைவுரையை வழங்க முன்வந்தேன்.

தலைவர் கலைஞர் அவர்கள் நமக்குத் தந்த ஐம்பெரும் முழக்கங்களைப் போல, அவரது வாழ்த்துகளுடனும் ஒப்புதலுடனும் புதிய ஐந்து முழக்கங்களை முன்வைத்து என் உரையைத் தொடங்கியபோது அதற்கு உங்களின் ஒருமித்த பேராதரவு கிடைத்தது.


Å கலைஞரின் கட்டளையைக் கண்போலக் காப்போம்!

Å தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம்!

Å அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம்!

Å மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்!

Å வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம்!

என்கிற அந்த அய்ந்து முழக்கங்களையும் என்னுடன் சேர்ந்து மேடையில் உள்ளோரும் எதிரில் திரண்டிருந்த தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான நீங்களும் திருப்பிச் சொன்னபோது, எழுந்த பேரொலி அரசியல் களம் முழுவதையும் நம்மை நோக்கித் திருப்பியுள்ளது. ஈரோடு மாநாடு கழகத்தினர் ஒவ்வொருவருக்கும் ஈடிணையற்ற இலட்சிய இன்பத்தைத் தந்துள்ளது.


மாநாட்டின் சிறப்பை-அதன் நேர்த்தியை- அதனால் ஏற்பட்டிருக்கும் தாக்கத்தை- கழகத்தினர் பெற்றிருக்கும் புத்துணர்வை- அது உருவாக்கப்போகும் புலிப்பாய்ச்சலை எண்ணிடும் போதே மெய் சிலிர்க்கிறது. ஈரோட்டு மாநாட்டை எழுச்சி பொங்க சிறப்பாக நடத்திக்காட்டிய கழக நிர்வாகிகளையும், மாபெரும் வெற்றி மாநாடாக உருவாக்கிக் காட்டிய தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளையும் பாராட்டிட வார்த்தைகளைத் தேடுகிறேன் தேடுகிறேன் தென்படவில்லை!எனது உள்ளம் கொள்ளும் மகிழ்ச்சியை உரைத்திட பொருத்தமான வார்த்தை ஏதும் உண்டோ? ஒவ்வொரு மாநாடு நடைபெறும் போதெல்லாம் “உடன்பிறப்பே வா” என்று தலைவர் கலைஞர் அவர்கள் எழுதும் அந்த கடிதம் கண்ட களிப்புடன் மாநாட்டிற்கு நீங்கள் குடும்பத்தோடு வந்தது என் நெஞ்சில் நிழலாடுகிறது. அப்படி ஒரு கடிதத்தை தலைவர் கலைஞர் அவர்களால் இப்போது எழுது முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கும், உங்களுக்கும் இருந்தாலும், அவர் ஏற்று நடத்திய லட்சியப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க அவர் சார்பில் மூன்றே மூன்று கடிதம் எழுதினேன்...

அந்தக் கடிதங்களையே அன்பான வேண்டுகோளாக ஏற்று, அலைஅலையாக வந்து குவிந்து எனது ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஆயிரம் மடங்கு பெருக்கியிருக்கிறீர்கள்.

எத்தனையோ பணிகள், குடும்ப சூழ்நிலைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, உங்களில் ஒருவனான இந்த எளியவனின் அன்பான அழைப்பையேற்று, மாநாட்டு வருகை தந்து, சிறப்பித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் கோடி முறை நன்றி சொன்னாலும் உங்கள் அன்பிற்கு முன் அது ஈடாகாது.

இந்த மகிழ்ச்சி நமக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கும் நிரந்தரமாக கிடைத்திட வேண்டும். அதற்கு, மாநாட்டு நிறைவுரையில் நான் விடுத்த வேண்டுகோளை நிறைவேற்றிடும் வகையில், தலைவர் கலைஞர் வாழும் காலத்திலேயே கழக ஆட்சியை மீண்டும் உருவாக்கி, அவருக்கு காணிக்கையாக்கிடுவோம்.

நன்றி.. நன்றி.. நன்றி..!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT