thangam thennarasu condemns Governor's speech on Vallalar Jayanti

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வள்ளலாரின் 200 ஆவது ஜெயந்தி விழா நடந்தது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

Advertisment

அப்போது பேசிய அவர், “சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களைப் படித்துள்ளேன். அதில் வள்ளலாரின் நூல்கள் பிரமிப்பை ஏற்படுத்தின. பத்தாயிரம் வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலர் சனாதன தர்மத்தை எதிர்க்கிறார்கள். சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்ளேயே இருப்பார்கள். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என வள்ளலார் கூறியது சனாதன தர்மத்தின் எதிரொலி.

Advertisment

இந்தியாவில் சிறுதெய்வம், பெருந்தெய்வம் வழிபாடு இருந்தபோது ஒருவரும் சண்டையிட்டுக் கொள்ளவில்லை. வெளியில் இருந்து புதிதாக வந்த மதங்கள் தங்களது மதம் பெரிது எனக் கூறியதால் தான் பிரச்சனை வந்தது. ஆங்கிலேயர்கள் நமது அடையாளத்தை அழிக்க நினைத்தனர். அவர்களது நாட்டு மக்களைக் கொண்டு வந்து நமது நம்பிக்கைகளை மாற்ற முயன்றனர். ஜி.யு.போப், பிஷப் கால்டுவெல் போன்றோரும் அதன் ஒரு பகுதி தான். நமது நம்பிக்கைகளை அழிக்க வந்தவர்கள் தான் அவர்களும். தமிழ்நாடு இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரம்” என்றார்.

ஆளுநரின் இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, “சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், “தா்ம ரட்சராகப்“ புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஈடுபட்டிருக்கிறார்.

தமிழ்ப் பண்பாடும் - விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன. ஒன்றிய அரசின் “தனிப்பெருங் கருணை“ ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை”எனத்தெரிவித்துள்ளார்.